அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? –பாகம் 2 Acquiring political power: on whose terms and conditions? (Part II) (Tamil)

Developing Just Leadership

Perwez Shafi

Shawwal 14, 1433 2012-09-01

by Perwez Shafi

இரண்டாம் கட்டம்:

ஐரோப்பியர்கள் முஸ்லிம் உம்மத்தைத் துண்டாடுதல்

பலவீனமாகி நொறுங்கிக் கொண்டிருந்த ஒரு கருத்தியலால் சிக்கலுற்றிருந்த முஸ்லிம் உலகின் பழுதடைந்த அரசியல் கட்டமைப்புகளை வாய்ப்பாக்கி, அதன் வளங்களைச் சுரண்டுவதற்காக ஐரோப்பியக் காலனியவாதிகள் பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உலகின் கதவுகளைத் தட்டினர். அதிலிருந்தே முஸ்லிம் வரலாற்றின் இரண்டாம் கட்டம் துவங்கியது. முஸ்லிம்களின் அரசியல் திறன்கள் அப்போது சகல கோணங்களையும் அல்லது வருங்கால விளைவுகளையும் நுணுகியுணரும் திறன்படைத்தவையாக இருக்கவில்லை; அவர்களின் இராணுவங்கள் ஒழுங்கு குலைந்து பிளவுபட்டுக் கிடந்ததுடன், அதிக விலைதரும் எவருக்கும் தமது விசுவாசத்தை தாரைவார்க்கவும் தயாராக இருந்தன. அறிவியல் மற்றும் பொருளாதார அல்லது தொழிற்துறை அகக்கட்டுமானம் என்று எதுவுமில்லை. முஸ்லிம்கள் இவ்வாறு வீழ்ந்து கொண்டிருக்கையில், ஐரோப்பியர்கள் ஏறுமுகத்தில் இருந்தனர். ஒரு உக்கிரமான சண்டைக்குப் பிறகே ஐரோப்பியக் காலனியவாதிகள் முஸ்லிம் உலகைக் கைப்பற்றினர் என்று கூறமுடியாது. மாறாக, கொள்ளையர் போல் வந்து ஐரோப்பியர்கள் முஸ்லிம்களைக் சூறையாடிய போது, வீழ்ச்சியிலும் சிதைவிலும் இருந்த முஸ்லிம்களுக்கு அது குறித்த தன்னுணர்வு கூட இருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

முதற் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் பண்புசார் வேறுபாடு இருக்கிறது. முதற் கட்டத்தைப் பொறுத்தவரை, வெகுமக்கள் நேரடியாக அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களில் ஆட்சியாளர்களைச் சவாலுக்குள்ளாக்காதவரை அவர்கள் ஒன்றும் செய்யப்படவில்லை; அவர்களின் படைப்பூக்கத்திறன் இவையல்லாத மற்ற வெளிகளில் வளர்ந்துசெழிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஐரோப்பியர்கள் தமது சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் குறித்த அச்சத்திற்கு ஆட்பட்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருக்கும் அரக்கன் (வெகுமக்கள்) விழித்துக் கொண்டால், தமது சுரண்டலின் நாட்கள் முடிவுக்கு வந்துவிடும் என்பதை அவர்கள் பூரணமாக அறிந்திருந்தனர். எனவே, அவர்கள் முலுக்கிய்யாவைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்றனர். முஸ்லிம் மன்னர்களாவது முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபட்ட, சமூக ரீதியில் வலிமையான ஓர் ஒற்றை அமைப்பாகவே விட்டுவைத்திருந்தனர்; ஆனால் இந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம் உம்மத்தை நிரந்தரமாக ஊனப்படுத்தும் நோக்கில் அதைத் திட்டமிட்டுப் பிளந்து துண்டாடினர். இனம், இனக்குழு, மொழி, பொருளாதாரம், மதம் போன்ற பிரிவினைக் கோடுகளின் ஊடே முதலில் உம்மத்தைப் பிளந்ததன் மூலம் அவர்கள் இதைச் செய்தனர். பின்னர் அப்பிரிவினைகளை மென்மேலும் அகலப்படுத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கினர். பிரிவினைக் கோடுகள் ஏதும் காணப்படாத பட்சத்தில், அவர்களே அவற்றைப் புனைந்துருவாக்கவும் செய்தனர்.

உஸ்மானிய கிலாஃபத்தை உள்ளிருந்து பலவீனப்படுத்துவதற்காக பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியத் தீபகற்பத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்றொரு நபரை சமூக-சமய “சீர்திருத்தவாதி” என்பதாக எழுச்சிபெறச் செய்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் எவ்வாறு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் வழிநடத்தப்பட்டார், பயன்படுத்தப்பட்டார், நிதியளிக்கப்பட்டார், ஆதரிக்கப்பட்டார் என்பதை “ஒரு பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலில் பிரிட்டிஷ் ஏஜென்ட் ஹெம்ஃபர் விரிவாக விளக்கியிருக்கிறார் (குறிப்பு: சவூதி மன்னராட்சி, வஹாபிசம் ஆகியவற்றின் வளர்ச்சியில் பிரிட்டிஷாருக்குப் பெரும்பங்கு இருந்திருக்கிறது என்பது எவராலும் மறுக்கமுடியாத ஓர் வரலாற்றுண்மை. எனினும், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபே பிரிட்டிஷ் உருவாக்கம் தானா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது). விளைவு தெள்ளத்தெளிவான அழிவுநாசம். இப்னு அப்துல் வஹ்ஹாபின் “சீர்திருத்தங்கள்” வஹாபிசம் எனுமொரு உட்பிரிவாக உருவெடுத்தன. இறைத்தூதர் விட்டுச்சென்ற வரலாற்று மற்றும் பௌதிகத் தடங்கள் அனைத்தையும் துடைத்தழிப்பதும், தமக்கு முன்னிருந்த முலுக்கிய்யாவின் ஏகாதிபத்திய வடிவத்தை இஸ்லாத்தின் பெயரால் மீள்நிறுவுவதுமே வஹாபிசத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. இன்று மக்காவில் கஅபாவையும் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியையும் சூழ உருவாகிவரும் தகதகக்கும் மேற்கத்திய ஐந்து நட்சத்திர விடுதிகளின் மத்தியில், தமது இஸ்லாமிய மற்றும் ஆன்மிகப் பாரம்பரியம் பெருமளவில் திட்ட்மிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருவதை கல்வியறிவற்ற ஏமாளி முஸ்லிம் வெகுமக்கள் கவனிக்க மாட்டார்கள் என்றே இந்த வஹாபிகள் நம்பிவருகின்றனர்.

அதே போல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் பஹாவுல்லா என்றொருவரை ஆதரித்தனர். அவர் முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் பஹாயிசத்தை உருவாக்கினார். சவூதி அரேபியாவின் வஹாபிசமும் பஹாயி மதமும் இன்று மேற்கத்திய காலனியவாதிகளால் வலுவாக ஆதரிக்கப்படுபவையாக இருக்கின்றன.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தோ-பாக் துணைக் கண்டத்தில் தமது இருநூறு ஆண்டுகால ஆக்கிரமிப்பின் போது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் மீதும் வேறுபட்ட அடையாளம் மற்றும் மனப்பாங்கைத் திணிப்பதன் மூலமும், தாழ்வு அல்லது உயர்வு மனப்பான்மையை விதைப்பதன் மூலமும் அவற்றைச் செயலிழந்தவையாக ஆக்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர். 1857 விடுதலைப் போருக்குப் பிறகு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்பது நாட்டைப் பிரிட்டிஷ் காலனியத்தின் பிடியிலிருந்து விடுவிக்க வல்லது எனும் அபாயத்தை பிரிட்டிஷார் உணரத்துவங்கினர். எனவே, இந்து-முஸ்லிம் சமுதாயங்கள் மத்தியில் தேசியவாதத்தை வளர்த்துருவாக்குவதில் அவர்கள் ஈடுபட்டனர். பின்னர் இரு சமுதாயங்களின் நலன்களையும் பிளவுபடுத்தும் நோக்கில் ‘இந்திய தேசிய காங்கிரஸ்’, ‘முஸ்லிம் லீக்’ என்ற இரண்டு அரசியல் கட்சிகளை உருவாக்கித் துணைக்கண்டம் இந்தியா-பாகிஸ்தான் என்று இரு தனித்தனி நாடுகளாகப் பிளவுபடுவதற்கு வழியமைத்தனர்.

எனினும், இத்தேசியப் பிரிவினையுடன் மட்டும் பிரிட்டிஷார் திருப்தியடைந்து விடவில்லை. முஸ்லிம்கள் தமக்குள்ளாகவே மேலும் பிளவுபட வேண்டுமென்று அவர்கள் விரும்பினர். 1857 விடுதலைப் போருக்குப் பிறகு, ஹனஃபி சிந்தனைப் பள்ளி மேலும் உட்பிளக்கப்பட்டது. குர்ஆனுக்கான கீழைத்தேயவாத வாசிப்பிலிருந்து, இறைத்தூதரின் (ஸல்) ஆளுமை மற்றும் வாழ்க்கைப் பணி தொடர்பான சில குறிப்பிட்ட அம்சங்களைத் ”தெளிவுபடுத்தக் கோரும்” அறிவார்வமிகு கேள்விகளை அவர்கள் முன்னெடுத்து வந்தனர். இதன் காரணமாக உலமா மத்தியில் தோன்றிய சூடான விவாதங்களைப் பிரிட்டிஷார் ஊக்கப்படுத்தினர். உலமாவின் பரஸ்பர நிலைப்பாடுகள் இறுதியில் இரு துணைச் சிந்தனைப் பள்ளிகளாக இறுகிப் படிகமாயின. பிற்காலத்தில் அவை இரண்டும் பிரிட்டிஷாரின் நேரடி அல்லது மறைமுக உதவியோடு தமது தலைமையகங்களை முறையே தேவ்பந்த் மற்றும் பரேலியில் நிறுவிக்கொண்டன. இக்குழுக்கள் முறையே தேவ்பந்திகள் மற்றும் பரேல்விகள் என்று அறியப்படுகின்றனர். தேவ்பந்திகள் மேலும் பல குழுக்களாகப் பிளவுபடுத்தப்பட்டனர். அதன் ஒரு விளிம்பில், ஜிஹாதையும் அரசியலையும் விட்டு ஒதுங்கிக்கொள்ளும் செயலாண்மையற்ற தப்லீக் ஜமாஅத்; மறுவிளிம்பில் சவூதி வஹாபிசத்தால் உணர்வூக்கம்பெற்று, சமாதிகளில் நிகழ்த்தப்படும் ஷிர்க்கை துடைத்தழிக்கும் நோக்கில் வழமையாகத் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான் போன்ற இனக்குழுக்கள். இதனுடன் கூடுதலாக, பிரிட்டிஷார் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி என்றொரு நபரையும் ஆதரித்துப் போற்றினர். அந்த நபர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனக்கு நபித்துவ அந்தஸ்து இருப்பதாகக் கோருமளவுக்குச் சென்றுவிட்டார் (அல்லாஹ் பாதுகாப்பானாக).

அரேபியத் தீபகற்பத்தில் சமய ரீதியில் வஹாபிசம் காலூன்றியதன் பிறகு, பிரிட்டிஷ் காலனியவாதிகள் தம்முடைய வேலைத்திட்டத்திற்கு சவூதிக் கோத்திரங்களில் இருந்து ஆள்பிடிக்க ஆரம்பித்தனர். அதற்கு முன் இச்சவூதிக் கோத்திரங்கள் நஜ்தின் பரந்துவிரிந்த பாலைவனத்தில் சுற்றித்திரிந்து கொண்டும், ஹஜ் பயணக் கூட்டங்களைக் கொள்ளையடித்துக் கொண்டும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ‘கிளர்ச்சி செய்வதன் மூலம் உஸ்மானிய கிலாஃபத்தைக் கீழறுப்பது’ என இச்சவூதிக் கொள்ளையர்களும் அல்-ஹிஜாஸின் ஷரீஃப் ஹுசைனும் தமது பல்வேறு கடிதங்களின் வழியாக பிரிட்டிஷாருடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். இதற்கு விலையாக, பிரிட்டிஷார் அவர்களுக்கு அரேபியா மீதான அதிகாரத்தை வாக்களித்தனர். இருவருக்கும் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டது. இன்று இந்தச் சவூதிகள், தாம் ஈரானுக்கு எதிராக (அபூ சுஃப்யான் வகை) சுன்னியிச நோக்கத்திற்காக செயலாற்றுவதாகவே கூறிவருன்றனர்; மேலும், ஈரானுடனான தமது பகைமையை உட்பிரிவுவாத மட்டத்திற்கு முன்தள்ளவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலோ, மேலை ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாக உஸ்மானிய கிலாஃபத்தைச் சேர்ந்த தமது சொந்த அஹ்லுஸ் சுன்னா சகோதரர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுவதில் இவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இருக்கவில்லை. ஆக, தீர்மானிக்கும் விதியாக இருந்தது ஏதேனுமொரு தர்க்க ரீதியான வாதமோ கொள்கையோ அல்ல; மாறாக பச்சையான சுயநலமும் சந்தர்ப்பவாதமுமே அன்று முதல் இன்று வரை விதியாக இருந்துவருகிறது.

காலனித்துவக் காலப்பிரிவில் முஸ்லிம் உம்மத்தின் ஆகப்பெரிய பேரவலமாக உருவெடுத்தது, வெளியிலிருந்து தூண்டப்பட்ட பிரிவினையோ உருச்சிதைவோ அல்ல; மாறாக, முஸ்லிம்கள் அவற்றை ஏற்று அகவயமாக்கிக் கொண்டது தான் ஆகப்பெரிய அவலமாக அமைந்தது. கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த முத்தகீ தலைமைத்துவமும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சியின் ஊடாகவோ; அல்லது அதனைப் பீரி-முரீதி இயல்பிலான ஒரு நிறுவனமாக (சீடரின் மீது மகான் கொண்டிருக்கும் சம்பூரண மேலாதிக்கத்தின் அடிப்படையிலான உறவு) மாற்றுவதன் ஊடாகவோ மேலும் ஓரங்கட்டப்பது. இதனுடன் கூடுதலாக, உலமா மற்றும் மகான்களின் அடக்கத்தலங்களைப் புனிதத் தலங்களாக மாற்றுவதையும் காலனியவாதிகள் ஊக்குவித்தனர்; அத்தகு அடக்கத்தலங்களில் அறியாத பாமர மக்கள் பல சமயங்களில் ஷிர்கின் எல்லையைத் தொட்டுவிடும் படியான வணக்க-வழிபாடுகளில் ஈடுபடவாரம்பித்தனர். மறுபுறம், இதே காலனியவாதிகள் பரேல்விகளைத் தாக்குவதற்கு தேவ்பந்திகளையும் வஹாபிகளையும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதன் மூலம், ஒரு நிரந்தரத் தாழ்செறிவுப் போர்ச்சூழலை உருவாக்கினர்.

மஸ்ஜிதுகளும் மார்க்க நிறுவனங்களும் பெரியளவில் விவசாய நிலங்களையும் அவை போன்ற இன்னபிற சொத்துக்களில் இருந்து வரும் கணிசமான வருமானங்களையும் பெற்றிருந்ததால், அவை ஒப்பீட்டளவில் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றிருந்தன. நன்கொடைகள் மற்றும் தானதருமங்களைக் கொண்டு மஸ்ஜிதுகளை நடத்துவது என்ற கருத்தாக்கமே முதற் கட்டத்தைப் பொறுத்தவரை இல்லை எனலாம். ஆனால் இரண்டாம் கட்டத்திலோ, காலனியவாதிகள் படிப்படியாக மஸ்ஜிதுகளிடமிருந்து இவ்வளங்களைப் பறித்து, அவை தமது இருப்புக்கு நன்கொடைகளை நம்பியிருக்கும் ஒரு நிலைக்கு ஆளாக்கினர். மேலும் மேற்கத்தியக் கல்விபயின்ற ஒரு வர்க்கம் தோன்றியதை அடுத்து, மஸ்ஜிதுகள் தமது வீரியத்தை இழக்கலாயின. சமூகத்தை வழிநடத்தும் திறன்படைத்த உலமா மற்றும் அறிஞர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, அவை எவ்விதச் சுயமரியாதையும் அற்ற, பிறப்பு அல்லது இறப்பின் போதான எளிய சடங்குகளை நிறைவேற்றுவதற்கென்றே ஒதுக்கப்பட்ட எளிய மனம்படைத்த முஅத்தின்கள், காரிகள் மற்றும் மௌலவிகளை உற்பத்தி செய்யலாயின. இப்பிற்போக்குவாத மதபீடத்திடம் செயற்துடிப்போ உலக அறிவியல்கள் பற்றிய ஞானமோ அல்லது சமூகத்தை வழிநடத்துவற்கான திறனோ மிகக் குறைவாகவே இருந்ததெனினும், இஸ்லாத்தை அதன் மிக அடிப்படையான மட்டத்தில் உயிரோடு வைத்திருத்தல், காலனியத்தின் இருண்ட அவநம்பிக்கை தரும் யுகத்தில் வெகுமக்களுக்கு ஆறுதலளித்தல் என்ற முக்கிய பெறுமதிமிக்க செயல்பாட்டை அது நிறைவேற்றிவந்தது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

நவ-காலனியக் கட்டம்:

சுதந்திரம் எனும் மாயையை உருவாக்குவதாகவும், வஞ்சகத்தால் நிரம்பியதாகவும், காலனியக் கட்டத்தைக் காட்டிலும் அதிதீவிர வடிவிலான ஒரு மேற்கத்திய மயமாக்கலாகவும் இருப்பதைத் தவிர நவகாலனியக் கட்டம் காலனியக் கட்டத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதாக இல்லை. இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து துவங்கிய நவகாலனியக் கட்டத்தில், நெறிப்படுத்தப்பட்ட ‘தேசியச் சுதந்திரப் போராட்டத்தின்’ விளைவாக ஒற்றை முஸ்லிம் உம்மத்தை உடைத்துச் சுமார் ஐம்பது நாடுகள் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்துக்கு அடையாளமாக உள்ளூர் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும் புலமைத்துவ, அரசியல், பொருளாதாரச் சுதந்திரம் என்பவை கானல் நீராகவே எஞ்சின. மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படும் இவை பொருளாதார ரீதியில் மேற்கத்திய உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஆயத்தச் சந்தைகளாகவும், கச்சாப் பொருட்களை வழங்குகின்ற மூலங்களாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக, உலகளாவிய முதலாளித்துவ அமைப்புக்குள் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. எனினும், இதற்கு உள்ளூர் அரசியல் மேட்டுக்குடிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருக்க வேண்டிய தேவையிருந்தது. விளைவு, தங்கள் சொந்த மக்கள் மீதே அவர்கள் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இரண்டாம் உலக யுத்தத்தின் வெற்றியாளர்கள் தான் வரலாற்றை எழுதினர்; அத்துடன், தாம் உலகை ஆளுவதற்காகத் தமது பிரதிபிம்பங்கள் என்ற வகையில் ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களை நிறுவினர். உள்ளூர் மேட்டுக்குடிகளைப் பயன்படுத்தி முஸ்லிம் நாடுகளும் இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான சட்டவிரோத நிறுவனங்களின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன. மேற்குலகு தனது லாபம் மற்றும் நலனுக்குகந்த எவ்வொரு தீர்மானத்திற்கான ஒப்புதலையும் இந்நிறுவனங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்கிறது. அத்தீர்மானங்கள் சட்டபூர்வமானவையே என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இந்நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன. துன்புறும் எஞ்சிய மனிதகுலமோ இந்நிறுவனங்களைத் தமது இன்னல்களை முறையிடுவதற்கான ஒரு தளமாகவும், தாம் பிழைத்திருப்பதற்கு மேலதிக மேற்கத்திய உதவிகளைக் கேட்டு இறைஞ்சுவதற்கான ஒரு தளமாகவும் மட்டுமே பயன்படுத்தி வருகின்றது.

மனிதஇனத்தை நாகரிகமயமாக்குவதே காலனித்துவக் காலகட்டத்தில் மேற்குலகின் இலட்சியப் பணியாக இருந்தது. நவகாலனியக் காலத்தில் அந்த இலட்சியப் பணி ஜனநாயகம் (democracy), ஜனநாயக விழுமியங்கள், நியமங்கள், நம்பிக்கை அமைப்பு ஆகியவற்றை ‘புனிதமான ஒரே சித்தாந்தம்’ என்ற ரீதியில் பரப்புவதாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. மேற்குலகக் கருத்தாக்கத்தின் படி, ‘demo’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘மனிதன்’ என்று பொருள். இப்போது அக்கருத்துச்சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது. (14 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையான) மறுமலர்ச்சி மற்றும் (1730 முதல் 1850-கள் வரையான) தொழிற்புரட்சிக்கு பிறகு அந்த வார்த்தைக்குப் பொருள் என்னவென்றால், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊடாக மனிதன் தன்னுடயை விதிக்குத் தானே எஜமானனாக மாறியிருக்கிறான்; இனியும் அவன் அல்லாஹ்வின் போதனைகள், வழிகாட்டுதல் மற்றும் திட்டத்தின் படி வாழ்வதற்கு அல்லது கட்டுப்படுத்தப்படுவதற்கு விரும்பாத ஓர் உயரத்திற்கு முன்னேறிவிட்டான், உயர்ந்துவிட்டான்.” வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், பிரபஞ்சப் படிநிலை அமைப்பில் இறைவன் வகித்துவந்த அதியுச்ச ஸ்தானத்தை மனிதன் கைப்பற்றிவிட்டான். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

உண்மையைக் கூறின், கிரேக்கக் காலங்களிலேயே கூட அசல் டெமாக்ரசி (“மக்களே நேரடியாக ஆட்சி செய்தல்”) நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லை. மேற்கத்திய அரசியல் விஞ்ஞானிகளும் மெய்யியலாளர்களும் கூட இதனை ஒப்புக்கொள்கின்றனர். உணமையைக் கூறின, அவர்கள் அதை “கும்பல் ஆட்சி” என்று வசைபாடியிருக்கின்றனர்; பண்படுத்தப்படாத மனித உள்ளுணர்வை அவர்கள் நம்புவதில்லை. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது புளூட்டோக்ரசியே; அதாவது, பணக்காரர்கள் மற்றும் செல்வம்படைத்தவர்களின் ஆட்சி. புளூட்டோக்ரசி ஆட்சிபீடத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்த அரசியல் அமைப்புக்கு ஒரு வலுவான மையம் மற்றும் திசையை வழங்குகிறது; முதலாளித்துவம் அதன் பொருளாதார இயந்திரமாகச் செயற்படுகிறது. அனைத்துப் பிற நிறுவனங்களும் அரசுக்காகப் பணியாற்றுகின்றன; அல்லது அரசோடு இணைந்து பணியாற்றுகின்றன. இந்த அரசியல் தத்துவம் மற்றும் அதனோடிணைந்த கட்டுமானங்களின் வினைத்திறன் விடயத்தில் சமூகத்திலுள்ள மேற்கத்திய மேட்டுக்குடிகள் மத்தியில் ஒருமித்த கருத்துடன்பாடு நிலவுகிறது.

புளூட்டோக்ரசி, டெமாக்ரசி அல்லது பிற எந்தத் தத்துவமாயினும்-இவை எதற்கும் மனித விழுமியங்களோடு எந்தச் சம்பந்தமுமில்லை. மனிதத் தன்மையற்ற இவ்வமைப்புமுறையில் ஏழைகளையும் அவர்களின் உழைப்பையும் சுரண்டியே பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக முடியும். முதலாளித்துவத்தின் அதியுச்ச விழுமியம் “லாபத்தைப் பெருக்குவது” மட்டுமே. பேராசை மற்றும் சுரண்டலுக்கான ஒரு மங்கல மொழி தான் (euphemism) “லாபத்தைப் பெருக்குவது” என்பது. இது ஓர் அசமத்துவம் மற்றும் வர்க்கப் போருக்கு வழிகோலுகிறது; ஏறத்தாழ செல்வமனைத்தையும் ஒரு வீதத்துக்கும் குறைவான செல்வந்தர்களின் கரங்களில் அது குவியச் செய்கிறது. இதற்கெதிராகவே, அமெரிக்காவில் மானுட மற்றும் சமூக சமத்துவ விழுமியங்களுக்காகக் குரலெழுப்பும் “99 வீத வெகுமக்கள்” எதிர்ப்பியக்கங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் கட்சிகளும் தேர்தல்களும் வெறும் ஒப்பனைச் சாதனங்களே; அவை தமது இயல்பிலேயே தர்க்க முரணானவை. “மாற்றம் சாத்தியமே” என்று நம்பவைத்து மக்களை ஈர்த்து இவ்வரசியல் அமைப்புக்குள்ளேயே அவர்களை வைத்திருப்பது தான் அவற்றின் குறிக்கோள். இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே தத்துவத்தின் வெவ்வேறு சாயல்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஆக, வஞ்சனையும் தோற்றமயக்கமும் ஜனநாயகத்தின் வேர்களிலேயே இருக்கின்றன. உண்மையில் இந்த மக்களாட்சி என்பது மக்களின் பெயரால் செல்வந்தர்கள் ஆட்சி செய்வதே. எனினும், இறைவனிடமிருந்தான இவ்விலகலில் ஒவ்வொரு வர்க்கமும் திரட்டிக்கொள்ளும் நலன்கள், விருப்புகள் மற்றும் பலன்கள் முற்றிலும் வெவ்வேறாக இருக்கின்றன; அவற்றுக்கு நடுவே மிகப் பரந்த இடைவெளி இருக்கிறது. தன்னுடைய நலனுக்கு உகந்தவாறு பிற மக்களை எவ்வாறு பண்படுத்துவது என்பதில் மேற்குலகுக்குச் சுமார் நூற்றைம்பதாண்டு கால அனுபவம் இருப்பதால், ஒரு அதிதீவிர சுரண்டல்வாத அமைப்பு கூட தனது அப்பட்டமான குறைபாடுகளையும் தாண்டிப் பிழைத்திருக்க முடிகிறது. டெமாக்ரசியின் அறுதி இலக்கும் விழுமியமும் என்னவென்றால், மனிதர்கள் அனைவரையும் செல்வமும் அதிகாரமும் படைத்தோருக்கு அடிமைகளாய் மாற்றுவதே.

முதிர்ச்சியடைந்த புளூட்டோக்ரசிகள் போலன்றி, சமீபத்தில் சுதந்திரமடைந்த முன்னாள் காலனி நாடுகளிடம் (அவை இராணுவத்தால் ஆளப்படினும், குடிமைப் பின்னணி கொண்டவர்களால் ஆளப்படினும் சரியே) உறுதியாகவும் ஆழமாகவும் வேரூன்றிய ஓர் தத்துவத்துடன் கூடிய வலுவானதொரு மையமோ பீடமோ இருப்பதில்லை. “பலவீனமான அரசுகள்” என்று அவை வருணிக்கப்படுகின்றன. இராணுவம், ஆட்சிப் பணித்துறை, நீதித்துறை, செயலாட்சித் துறை, நாடாளுமன்றம் என அவற்றின் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி அதிகார மையங்கள் போன்று செயல்படுகின்றன. யு.எஸ்ஸும் பிற ஏகாதிபத்தியச் சக்திகளும் அந்நிறுவனங்கள் ஒவ்வொன்றுடனும் தனித்தனியாக நேரடி உறவைப் பேணுகின்றன. ஏதேனுமொரு நிறுவனம் யு.எஸ். வகுத்துக் கொடுக்கும் பாதையில் நகரவில்லையெனில், மற்றொரு நிறுவனத்தைக் கொண்டு அது முடக்கப்படும்.

முஸ்லிம் அரசுகளிலுள்ள மேல்தட்டினர் மேற்குலகில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்; மேற்கத்திய விழுமியங்கள், நியமங்கள் மற்றும் நம்பிக்கை அமைப்பினை அவர்கள் தம்முள் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு நலன்கள் ஒன்றாகவே இருக்கின்றன. அவர்கள் எப்போதேனும் இஸ்லாத்தை மேற்கோள் காட்டுகிறார்கள் என்றால், அது வெகுமக்களை முட்டாளாக்குவதற்கு மட்டுமே. இச்சுதேசி மேட்டுக்குடிகள் தமக்கான அரசியல் சித்தாந்தத்தைச் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் தெரிவையோ மாற்றையோ மேற்குலகு அவர்களுக்குத் தருவதில்லை. தங்கள் நாடுகள் சடவியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மேற்குலகைச் சார்ந்து இருக்கும்படிச் செய்வதும்; சுரண்டப்படுவதற்கும் மேற்கத்தியச் சந்தைகளோடு ஒருங்கிணைக்கப்படவும் ஏதுவாக, உள்ளூர்ப் பொருளாதாரங்கள் திறந்திருக்கும் படி பார்த்துக் கொள்வதுமே அவர்களின் பணி.

மேற்குமயமாதல் எனும் நோய் மதச்சார்பற்ற மேல்தட்டினரை மட்டும் தொற்றியிருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் பெருந்துயரான வகையில், முழுச் சமய பீடமுமே கூட தமது இஸ்லாமிய அறிவையும் மீறி அதனால் பாதிக்கப்பட்டுள்ளது. நவகாலனியக் கட்டத்தில் சமய பீடம் மாபெரும் நிலைமாற்றத்திற்கு உள்ளாகி, ஜனநாயகச் செயல்முறை என்று சொல்லப்படுவது ஓர் ஏமாற்று என்பதை அறியாமால், அதில் பங்கேற்கத் துவங்கியது. இது இஸ்லாத்தின் இலக்குகள் மற்றும் வழிமுறைகளுக்கு முரணானது. இருப்பினும் சமூக நீதி, சமத்துவம், மனிதகுலத்தை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்தல் போன்ற இஸ்லாமிய இலக்குகளை அதன் மூலம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில், அவர்கள் அந்தச் செயல்முறையை ஏற்று வரித்துக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் முனைந்தனர். சமய, அரசியல் கட்சிகளுக்கு (அரசியல் கட்சி அல்லாத குழுக்களுக்கும் கூட) இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு குறுக்கு வழியாகவும், அது கைக்கெட்டும் தொலைவில் உள்ளது போன்றும் தோற்றம்தந்து ஆசைகாட்டிச் சுண்டியிழுக்கிறது.

மேற்கத்தியச் செல்வாக்குக்கு உள்ளான அவர்கள் தேர்தலில் வெற்றிபெற வேண்டியதே இலக்கு என நம்பத் துவங்கிவிட்டனர். (அந்தத் தேர்தல்கள் பொதுவாக இராணுவத்தின் மோசடிக்கு ஆளாகின்றன என்பது தனிக் கதை ). ஆட்சிக்கு வந்ததும், ஷரீஆவை விதியாக்குவதன் மூலம் ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்கி விடலாம் என்று அவர்கள் கற்பிதம் செய்கின்றனர். அவர்கள் கூறும் இஸ்லாமிய அரசினால் மேற்குலகோடு சகஜீவனம் நடத்த முடியும்; பொருளாதார ரீதியில், உலகளாவிய முதாலாளித்துவ அமைப்போடு ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக எஞ்சியிருக்க முடியும்; அரசியல் ரீதியில், மேற்குலகோடு ஒரு அடிமைத்துவ உறவைப் பேண முடியும். இது மேட்டிமைத்தனமான, மேலிருந்து கீழாக அமையும் ஒரு அணுகுமுறை. மேலும், இது தீவிரப் பழுதுள்ள ஒரு அணுகுமுறையுமாகும். ஏனெனில் வழிமுறைகளையும் இலக்குகளையும் வேறுபடுத்திப் பார்க்கும் திறனோ; அல்லது, இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய ஜனநாயக அமைப்புகளை வேறுபடுத்திப் பார்க்கும் திறனோ இந்த அணுகுமுறையிடம் இல்லை. அளவுக்கு மீறி எளிமைப்படுத்தப்பட்டதும், முதிர்ச்சியற்றதும், வழிபிறழச் செய்வதுமான இம்மாதிரி ஷரீஆவுக்கும் நபிகளாரின் சுன்னாவுக்கும் எதிராக இருப்பது பற்றி இவர்களுக்கு கவலையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. அண்ணல் நபியவர்கள் சமூகத்தில் இஸ்லாமியக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே, பிற வழிகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலவில்லை. இஸ்லாத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பரப்புவதன் மூலமும் நடைமுறைப்படுத்துவதன் மூலமும் (ஏதேனுமொரு அம்சத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிப்பதல்ல) நபியவர்கள் அன்றிருந்த இனக்குழுவாத ஜாஹிலி சமூகத்தின் சமூகக் கட்டமைப்பை இஸ்லாமியச் சமூகமாக நிலைமாற்றினார்கள் என்றே சீறா நமக்குப் போதிக்கிறது. எப்போது இந்த சமூக நிலைமாற்றம் நிகழ்ந்தேறியதோ, அப்போது இஸ்லாமிய அரசுக்கான பாதை தானாகவே திறந்துகொண்டது. எனவே, இஸ்லாமிய இயக்கத்தின் இலக்கு இஸ்லாமிய அரசைக் கட்டமைப்பது அல்ல; மாறாக, அறியாமைச் சமூகத்தின் சமூக அடித்தளத்தை இஸ்லாமிய சமூகமாக நிலைமாற்றுவதே அதன் இலக்காக இருக்கிறது. பின்னர், அந்நிலைமாற்றத்தின் தர்க்க விளைபலனாக இஸ்லாமிய அரசு அமைகிறது. இது கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறை. சீறாவின் நோக்கில் இதுவே இஸ்லாமியப் புரட்சி.

நவகாலனியக் கட்டத்தில், மாற்றத்திற்கான முக்கிய வினையூக்கிகளுள் ஒன்றாக இருப்பது உலமாவும், அவர்கள் நிறுவிய நிறுவனங்களும். முரண்நகையாக, மாற்றத்திற்கும் முத்தகீ தலைமைத்துவம் தோன்றுவதற்கும் அவையே தடைக் கற்களாகவும் இருக்கின்றன. இதற்கான முதன்மைக் காரணங்களுள் ஒன்று, பெரும்பான்மை சுன்னி உலமாவும் அவர்களின் நிறுவனங்களும் நடப்பிலுள்ள ஆட்சிகளால் (பிரதானமாக சவூதி ஆட்சியால்) வெகுவாக நிதியுதவி அளிக்கப்படுகின்றனர் என்பதே. இந்த உலமாவும் அவர்களின் பீடங்களும் தொடர்ந்து மோசடியான, நெறிபிறழ்ந்த ஒரு சுன்னி அரசியல் சிந்தனையையே பின்பற்றுவதை இவ்வித நிதிநல்கை உத்தரவாதம் செய்துகொள்கிறது. இந்த அரசியல் சிந்தனையில் முஆவியாவும் யஸீதும் விதந்தோதப் படுகின்றனர்; அபூ சுஃப்யானின் மனைவி ஹிந்தாவுக்கும் கூட மறுவாழ்வு அளிக்கத் தற்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உஹதுப் போரில் ஹம்ஸா (ரழி) வீரமரணம் அடைந்தபோது இந்த ஹிந்தா அன்னாரின் உடலை உருக்குலைத்தத்துடன், அன்னாரின் ஈரலையும் மென்றுதுப்பியவர். மரணித்த ஒருவருக்கு இழைக்கப்பட்ட இம்மாபெரும் அவமதிப்பைக் கண்டு நபிகளார் அளவிலாக் கடுந்துயருற்றாகள். ஹம்ஸா (ரழி) அவர்கள் நபிகளாரின் சிறிய தந்தையாக, நெருங்கிய நண்பராக, ஏறத்தாழ சம வயதுடையவராக இருந்தமை நபிகளாரை இன்னுமதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மேற்குலகு மற்றும் ஸியோனிஸ்டுகள் உடனான நட்பும், அவர்கள் மீதான சார்பும், துவக்ககால மன்னராட்சிப் பரம்பரைகளின் (முலுக்கிய்யா) ஒரு தொடர்ச்சியாக சவூதி மன்னராட்சி வளர்ந்துசெழிப்பதை ஆதரிப்பதும் இன்றியமையாதவையாகக் கருதப்படுகின்றன. சவூதி பெட்ரோ-டாலர்கள் “உலமாவையும்”, “அதிகாரபூர்வ” சுன்னி உலகநோக்கையும் அண்ணல் நபியின் ஆகக் கொடிய எதிரிகளைப் புகழ்ந்துபாராட்டுகிற ஒரு பாதையிலேயே வைத்திருப்பின், மாற்றத்திற்கான வாய்ப்புகள் மங்கலானவையே. எனவே சவூதி நிதிநல்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முத்தகீ தலைமைத்துவம் தோற்றம்பெற முடியும். எதிர்நோக்கியிருக்கும் போராட்டத்திற்குத் தேவையான தரம்வாய்ந்த முத்தகீ தலைமைத்துவம் உருவாவதற்கு உட்பிரிவுவாதப் போக்கு மற்றும் சட்டவிரோத முரண்பாடுகளை விட்டுத் தூய்மையான புதிய நிறுவனங்கள் தேவை. “இஸ்லாமிய” அரசியல் கட்சிகளால் இப்பிரச்சினையைத் தீர்க்கமுடியாதென்பதால், உண்மை இஸ்லாமிய இயக்கம் முதல் நடவடிக்கையாக ஓர் அறிவுசார் போராட்டத்தைத் துவக்க வேண்டும்.

இலக்குகளையும் வழிவகைகளையும் குழப்பிக் கொண்ட காரணத்தினாலேயே, சமய மேல்தட்டினரும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தோல்வியுற்று வருகின்றனர். இருப்பினும், அவர்கள் தமது வழிமுறையில் மாற்றத்தை அனுமதிப்பதையோ சீறாவிலிருந்து படிப்பினைகள்கள் பெறுவதையோ விரும்புவதில்லை. ஆனால், சமய பீடத்தின் இந்த ஜனநாயக உலகநோக்கானது முலுக்கிய்யா என்னும் நெறிபிறழ்ந்த சுன்னி அரசியல் சிந்தனையின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் விளங்கிக் கொள்ளும் போது, இவ்விரு மனப்பான்மைகளின் ஒரு கலவையைக் கொண்டு உலகியல் மாற்றங்களைச் சாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இஸ்லாமிய இலக்குககள் பற்றியும் ஒரு வரலாற்றுப் பரிணாமத்தின் ஊடாக அவற்றை அடைவதற்கான வழிவகைகள் பற்றியும் இங்கு தரப்பட்டுள்ள கோட்பாட்டியல் பின்னணி, முஸ்லிம் உலகில் ஏற்பட்டுவரும் சமீபத்திய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகாண்பதைச் சாத்தியமாக்குகிறது. குறிப்பாக, இஃக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சி தேர்தல்களில் அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளதால் எகிப்து மிகச் சிறந்தவொரு எடுத்துக்காட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறது; துருக்கி மற்றொரு, ஆனால் வேறுபட்ட எடுத்துக்காட்டு.

அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமடைய வேண்டுமென்ற முஸ்லிம்களின் ஏக்கமும் எழுச்சியும் மெய்யானது. ஆனால், இஃக்வானுல் முஸ்லிமீனைத் தன்வசப்படுத்தவும்; நிகழவிருக்கும் நிலைமாற்றத்தை அதன் புரட்சிகர ஆன்மாவை விட்டுத் தூரமாக்கவும்; அதை வெறுமனேயொரு அதிகார வர்க்க மாற்றமாக ஆக்குவதற்கும் அமெரிக்கா மும்முரமாக முயலுகின்றது. அந்த அதிகார வர்க்க மாற்றம் எவ்வாறிருக்கும் என்றால், அதில் இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத் தலைவர்களுக்கு சில அரசாங்கப் பதவிகள் வழங்கப்படும்; ஆனால் உண்மை அதிகாரத்தை இராணுவமே -அதன் மூலம் அறுதியில் அமெரிக்காவே-தம் கைகளில் வைத்துக் கொள்ளும். நடந்தேறும் நிகழ்வுத் தொடர் இஃக்வானுல் முஸ்லிமூன் செய்துகொள்ளும் சமரசங்கள், “யதார்த்தத்துடன்” அனுசரித்துப் போதல் என்பனவற்றின் கதையை வெளிப்படுத்தத் துவங்கியிருக்கிறது. அவற்றோடு சம்மந்தப்பட்ட கோட்பாடு, அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. (கீழ்வரும் பத்திகளைக் காண்க):

முஸ்லிம்களின் எழுச்சி துவங்கி ஓராண்டுக்குப் பிறகு, இவ்வாண்டின் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உள்துறைச் செயலர் வில்லியம் பர்ன்ஸ் இஃக்வான்களின் துணைப் பொதுவழிகாட்டி கைராத் அல்-ஷாத்திரைச் சந்தித்தார் (அற்பமான காரணங்களைக் கூறி தேர்தல் ஆணையம் கைராத் ஷாத்திரின் வேட்புமனுவைச் நிராகரிப்பதற்கு முன், சக்திவாய்ந்த வேட்பாளராகக் கருதப்பட்டவர் அவர்). இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கை தொடர்ந்து பேணப்படுமாயின், சர்வதேச நாணய நிதியம் மற்றும் வளைகுடா ஷெய்க்டோம்களிடம் இருந்து 20 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியுதவி பெற்றுத் தரப்ப்படுமென பர்ன்ஸ் வாக்களித்தார். இஃக்வான்களும் நடப்பு நிலையைப் பேணுவதற்கு உடனே ஒப்புக் கொண்டனர். இதற்கு முரணாக இஃக்வான்கள் வெளியிட்ட அறிக்கை வெறுமனே பொது மக்களின் நுகர்வுக்கானது. (செயலுத்தி சார்ந்த உதவிக்காக மூலோபாயம் சார்ந்த சமரசம் செய்துகொள்ளல்; நண்பரையும் பகைவரையும் வேறுபடுத்திக் காணமுடியாதிருத்தல்). நீதித்துறையும் ஆயுதப் படைகளின் உயர்மட்டக் கவுன்சிலும் (SCAF) அதிபர் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், ஏற்கனவே இஃக்வான்கள் வென்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலை அதிரடியாக ரத்துசெய்தனர். இஃக்வான்கள் இதனை எதிர்த்தபோதும் இதுவரை பலனில்லை. (ஒரு நிறுவனத்தைக் கொண்டு மற்றொன்றை முடக்குதல்).

முஹம்மது முர்ஸி அதிபரான சில நாட்களிலேயே ஜூலை 11-ல் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்தார்.(இது ஹிலாரி கிளிண்டன் கெய்ரோ வருவதற்கு முன்பு நிகழ்ந்தது). மன்னர் குடும்பத்துக்கு மிக நெருக்கமான சவூதி கல்வியலாளர் ஒருவர் லண்டனிலிருந்து வெளிவரும் அல்-ஹயாத் செய்தித்தாளில் “இஃக்வான்களின் முர்ஸியிடம் வளைகுடாக்காரர்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்ற தலைப்பில் தானெழுதிய ஒரு கட்டுரையில் எழுப்பியிருந்த கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதாக இவ்விஜயம் அமைந்தது. வளைகுடா ஷெய்க்டோம்களின் நான்கு பெரும் விவாரங்களில் முர்ஸி ஓர் பகிரங்க உத்தரவாதம் வழங்க வேண்டுமென அவர் அக்கட்டுரையில் கேட்டிருந்தார்:

1. ஷெய்க்டோம்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு அந்த நாடுகளிலுள்ள இஃக்வான் உறுப்பினர்களையோ வலையமைப்புகளையோ பயன்படுத்தக் கூடாது.

2. ஈரானுக்கு எதிராகத் தங்களுக்கு உதவவேண்டும்.

3. ஜனநாயக துருக்கியைக் காட்டிலும் சவூதி அரபியாவுடனும் அதன் அண்டை நாடுகளுடனும் வலுவான உறவுகளைப் பேணவேண்டும்.

4. ஹமாஸ் தனது கிளையமைப்பாக இருப்பினும், ஃபாலஸ்தீனர்களின் உட்பூசல் அரசியலை விட்டு விலகியிருக்க வேண்டும்.

ஒரு வாரத்திற்குள்ளாகவே முர்ஸி தனது அறிக்கைகளின் ஊடாக இவ்வனைத்து கோரிக்கைகளுக்கும் உடன்பாடு தெரிவித்துவிட்டார். சவூதி அரேபியாவில் இருந்தபோது அவர் சவூதி மன்னரிடம், எகிப்து சவூதி அரபியாவுடன் தந்திரோபாயக் கூட்டணியைப் பேணுமென்றும்; பிராந்தியத்தில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதில் (வளைகுடா மன்னராட்சிகளுக்கு ஈரானிடமிருந்து வரும் சவாலையே இது நேரடியாகக் குறிக்கிறது) உதவுமென்றும் உறுதிமொழி அளித்தார். இதன் மூலம் “மிதவாத சுன்னி முகாமின்” கொள்கையே எகிப்தின் கொள்கையாக இருக்குமென்று உத்தரவாதம் வழங்கினார். முன்னாள் பாகிஸ்தான் தளபதி பர்வேஸ் முஷாரஃபின் “முதலில் பாகிஸ்தான்” கொள்கையைப் போன்றே, எகிப்தும் “முதலில் அரபு” என்ற வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து பேணுமென்றும்; துருக்கியின் ஜனநாயக மாதிரியை அளவுக்கு மீறி பின்பற்றப் போவதில்லை என்றும் தனது சவூதி விருந்தோம்பிகளிடம் முர்ஸி உறுதிகூறினார். மேலும், கேட்டுக்கொண்ட படியே ஃபாலஸ்தீனக் குழுக்களிடம் சமதொலைவு பேணுவோமென்றும் முர்ஸி வாக்களித்தார். இதைக் காட்டிலும் முக்கியமாக, ஃபாலஸ்தீன எதிர்ப்புப் போராட்ட அணிக்கெதிராக சவூதி மற்றும் இஸ்ரேலிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பக்கம் நின்று பணியாற்றுவோம் என்றும் அவர் வாக்களித்தார். (உள்ளூர் மேல்தட்டினர் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் சுயச்சார்பு கொண்டவர்கள் அல்லர்; மாறாக, அறுதியில் யு.எஸ்ஸுக்கும் அதன் உள்ளூர் சவூதி முகவர்களுக்கும் கீழ்ப்படிந்தவர்களே. எவ்விலை கொடுத்தேனும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவது என்ற அவர்களின் குறுகிய நோக்கு, அவர்களைத் தமது சொந்தச் சகோதரர்களுக்கு எதிராகச் செயற்படுமாறும் ஏகாதிபத்திய மேற்குலகு மற்றும் ஒடுக்குமுறைச் சக்திகளின் பக்கம் அணிசேருமாறும் நிர்பந்திக்கிறது).

யு.எஸ். உள்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் முர்ஸியைச் சந்திப்பதற்காக எகிப்துக்கு வருகைதந்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன், “குடிமை ஆட்சியை நோக்கிய முழுமையான நிலைமாற்றத்தை அதன் சகல உள்ளர்த்தத்திலும் யு.எஸ். ஆதரிக்கிறது” என்று அறிவித்தார். அவர் அதற்கு மறுநாள் SCAF தலைவர் களத்தளபதி ஹுசைன் தன்தாவியைச் சந்தித்து, குடிமை அமைப்புடன் இணங்கிப் போகும்படி வலியுறுத்தியதோடு, எகிப்திய இராணுவம் முழுமையாகத் தனது “தேசியப் பாதுகாப்புப் பாத்திரத்துக்கு” திரும்ப வேண்டுமென்றே யு.எஸ். விரும்புகிறது என்றும் அறிவித்தார். அதற்குப் பகரமாக, இராணுவத்துக்கு இன்னும் பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியை வாக்களித்தார். (யு.எஸ். ஒன்றுக்கு மேற்பட்ட பலவீனமான அதிகார மையங்களைத் தனித்தனியாகக் கையாளுகிறது).

இந்தச் சீரழிந்த சுன்னி அரசியல் சிந்தனை மீது கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய ஜனநாயக மாதிரியால் சிரியாவிலும் கூட நண்பரையும் பகைவரையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் கொடிய சர்வாதிகாரிகளே ஆட்சியிலிருக்கின்றனர்; இதற்குச் சிரியாவும் விதிவிலக்கில்லை. எனினும், குறைந்தபட்சம் சிரியாவாவது கடந்த நான்கு பத்தாண்டுகளாக நிலையாக வலுவானதொரு இஸ்ரேல்-எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பதுடன், பல்வேறு ஃபலஸ்தீனக் குழுக்களுக்கு உதவிசெய்தும் வருகிறது. இந்த ஒரு காரணம் மட்டுமே கூட அஸதின் ஆட்சியைச் சீர்குலைக்காமல் இருப்பதற்குப் போதுமானது; அதேவேளை யு.எஸ்., இஸ்ரேல் மற்றும் சவூதிகளும் பிற ஷெய்க்டோம்களும் அஸதின் ஆட்சியைச் சீர்குலைக்கக் கடுமையாக முயன்று வருகின்றனர்.

இது மற்றொரு கேள்வியை எழுப்புகிறது. சிரியாவிலுள்ள எதிர்ப்பு அணி, யமன் மற்றும் பஹ்ரைனைப் போல் பொதுமக்கள் எதிர்ப்பியக்கத்தைத் துவங்குவதை விடுத்து, லிபியாவைப் போல் துவக்கத்திலேயே திடீரென ஆயுதப் போராட்டத்தில் குதித்தது ஏன்? வன்முறை மற்றும் பலாத்காரத்தின் மீதான சார்பு சுன்னி அரசியல் சிந்தனையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது எனினும், அது மேற்கத்திய-சவூதிய-ஸியோனிஸ ஆயுதங்கள் மற்றும் கூலிப்படைகளால் மேலும் தூண்டிவிடப்பட்டது. முஆவியா அதிகாரத்திற்கு வந்த நாளிலிருந்து இதுவரை சுன்னி அரசியல் சிந்தனையின் முன்மாதிரியில், ஒருபோதும் அமைதிகரமான அதிகார மாற்றம் நிகழ்ந்தது இல்லை. ஒன்று, தனது எதிராளிகளைக் கீழடக்குவதற்கு வரைமுறையற்ற பலாத்காரத்தைப் பிரயோகிக்க வேண்டும்; அல்லது, தாம் கீழடக்கப்படவும் படுகொலை செய்யப்படவும் தயாராகிக் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் நடுவில் வேறு தெரிவு இல்லை. மேலும், நிச்சயமான விதிகளோ விதிமுறைகளோ முன்னுதாரணமோ எதுவும் இல்லை. எதிர்ப்பு அணி தம்முடைய மனக்குறைகளை வெளிப்படுத்த விரும்பியிருப்பின், அவர்கள் மிகுதியான பலாத்காரத்தை உள்ளார்ந்து நாடாமல் பஹ்ரைன் அல்லது யமனைப் போல் பொதுமக்கள் போராட்டத்தை நிச்சயம் துவங்கியிருக்க முடியும். (ஒன்று பூரணச் சரணடைவு அல்லது வரைமுறையற்ற வன்முறை வெறியாட்டம் என்ற) இவ்வகை துருவநிலை அணுகுமுறை, எதிர்ப்பணியினரை முட்டுச் சந்திலேயே முடக்கிவைக்கும். இதன் காரணமாகவே கொடிய சர்வாதிகாரிகளும் அவர்களின் பரம்பரை ஆட்சிகளும் பல பத்தாண்டுகள் நீடிக்கமுடிகிறது. இந்த அரசியல் மனப்பான்மையே இன்னும் மேலோங்கிக் காணப்படுகிறது. (மிகுதியான பலாத்காரத்தின் மீதான உள்ளார்ந்த சார்பு தான் சர்வாதிகாரிகள் நீடித்திருப்பதன் இரகசியம்).

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை, துருக்கியைக் காட்டிலும் அதிக வெற்றிகரமான நாடு வேறெதுவும் இல்லையென்றே தோன்றுகிறது; அப்படி இருந்தும் கூட அது யு.எஸ்ஸின் மேலாதிக்கத்தையும் அதன் பூகோள மற்றும் பிராந்திய நிகழ்ச்சி நிரலையும் ஏற்று, இஸ்ரேலுடன் நட்புபாராட்டி வருகிறது; யு.எஸ்ஸின் மூலோபாய நலன்களை ஒருபோதும் சவாலுக்குள்ளாக்குவதும் கிடையாது. என்றாவது ஒருநாள் பிற முஸ்லிம் நாடுகள் யு.எஸ். ஆதரவுபெற்ற சர்வாதிகளிடமிருந்து விடுதலைபெற நேருமாயின், அவை பின்பற்றத்தக்க ஒரு ஜனநாயக முன்மாதிரியாகத் துருக்கியை உயர்த்திப் பிடிப்பதையிட்டு யு.எஸ். வசதியாக உணருவதற்குக் காரணம் இதுவே. துருக்கியின் சமயவாத அரசியல் கட்சி அணுகுமுறையுடன் பத்தாண்டுகால அனுபவம் பெற்றுவிட்ட யு.எஸ்., இப்போது எகிப்திலும் ஒரு ஜனநாயக ஒழுங்கை நோக்கிய நிலைமாற்றத்தைக் கையாளுவதில் தன்னம்பிக்கையை உணருகிறது. மறுபுறம் பஹ்ரைனிலோ, மனித உரிமைகளை மதிப்பதை விடுத்து ஒடுக்குமுறையையும் கொடுமைகளையும் பிரயோகிக்க யு.எஸ். தயாராக இருக்கிறது; ஏனெனில், அங்குள்ள பிரபுத்துவ மன்னராட்சியைக் கவிழ்ப்பதென்பது யு.எஸ்ஸின் மூலோபாய நலன்களை நேரடியாக அச்சுறுத்துவதாக அமைகிறது. (மாற்றம்பெறுவதற்கு எந்த நாடு அனுமதிக்கப்படும், எந்த நாடு தடுத்து நிறுத்தப்படும் என்பது யு.எஸ்ஸின் மூலோபாய நலன்களைப் பொறுத்தது).

மேற்குலகுடன் நட்புபாராட்டாத எந்தவொரு அரசாங்கத்தையும் தூக்கியெறிவதற்காக எதிப்பு அணிகளை ஆதரிப்பதில் யு.எஸ்ஸுக்கோ ஸியோனிஸ்டுகளுக்கோ எவ்விதத் தயக்கமும் இல்லை; அந்த எதிர்ப்பு அணிகள எந்தவொரு குழு அல்லது சிந்தாந்தத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும்; அல்காயிதா அல்லது நன்கறியப்பட்ட பயங்கரவாதிகள் உள்ளிட்டோராக இருப்பினும் சரியே. (அந்தப் பயங்கரவாதிகள் யு.எஸ்ஸின் நலன்களுக்குச் சேவை செய்கின்றனரா இல்லையா என்பது தான் இங்கு அளவுகோலாக இருக்கிறது ).

முடிவுரை:

“மிதவாத சுன்னி” அரசுகள் என்று கூறப்படுபவற்றின் செயற்பாடுகளின் ஊடாகக் காணத்தக்க இந்த உட்பிரிவுவாத சுன்னி அரசியல் சிந்தனை சீரழிந்த ஒன்றாகவும், தேய்ந்து செல்வதாகவும், மீள்பரிசீலனை மற்றும் சீர்திருத்தத்தின் பால் தேவையுடையதாகவும் இருக்கிறது என்பது வரலாற்றுப் பரிணாமத்தின் ஊடாகத் தெளிவாகப் புலப்படுகிறது. முஸ்லிம் அரசுகளின் வீழ்ச்சி மற்றும் நலிவினால் வரும் இழிவு உள்ளங்கை நெல்லிக்கனியாகும்; எனவே, நாம் அதன் கருத்தியலின் கற்பிதங்களைச் சவாலுக்குள்ளாக்க வேண்டும். வெறுமனே மேல்பூச்சான ஒரு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது போதுமானதல்ல; அது யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் கைப்பற்றப்படுகிறது என்பதே இங்கு அசல் கேள்வி: யு.எஸ். மற்றும் ஸியோனிஸ நலன்களுக்குக் கீழ்ப்படிந்த நிலையில், ஒரு ஜனநாயக முகமூடியுடன், சுன்னி-மேற்கத்திய-ஸியோனிஸ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரிலா? அல்லது வெகுமக்களின் புரட்சிகர உணர்வின் பால் சார்பு கொண்டு (அந்தப் புரட்சிகர உணர்வு முதலில் ஒரு இயங்காற்றல் மிக்க இஸ்லாமியச் சமூகமாக நிலைமாற்றப்பட வேண்டும்), தமது சொந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரிலா? ஒரு சமயவாத அரசியல் கட்சியால் இப்பணியைச் சாதிக்க முடியாது; உண்மை இஸ்லாமிய இயக்கத்தால் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். அதன் பிறகே, அது ஒரு சுயேட்சையான இஸ்லாமியத் திசையில் நடைபோட முடியும். எனினும் இதற்கு முன்நிபந்தனை யாதெனில், முலுக்கிய்யாவின் காலந்தொட்டு தேக்கநிலையில் இருந்துவரும் நம்முடைய உலகநோக்கின் (மேற்கத்திய ஜனநாயக விழுமியங்களும் நியமங்களும் அதன் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன) அடிப்படைக் கற்பிதங்களை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். திருக்குர்ஆன் பிரகடனம் செய்வது போல், “மக்கள் தமது மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாத வரை, அல்லாஹ் அந்த மக்களின் நிலைமைகளை மாற்ற மாட்டான்…” (13:11). ஆக, ஒரு சமூகம் தனது இதயத்திலிருப்பதை மாற்றிக்கொள்ளாத வரை அந்தச் சமூகத்தின் நிலை மாறாது. வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், உலகநோக்கு மற்றும் மனோபாவத்தில் ஏற்படுகின்ற மாற்றம் உலகியல் நிலைமைகளிலான மாற்றத்துக்கு வழிகோலும்.

முஸ்லிம் அரசியல் சிந்தனையின் உயர்ந்த முன்மாதிரியை நோக்கி நாம் பரிணமிக்க வேண்டுமெனில், சுன்னி அரசியல் சிந்தனையினுள் அறிமுகப்படுத்தப்பட்ட துவக்ககால வரலாற்று முரண்பாடுகளை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். இச்சீர்திருத்தங்கள் நம்மைக் காலம் மற்றும் வரலாற்றில் ஓர் உண்மையான குவியப் புள்ளிக்கு இட்டுச் செல்லும்; அதாவது, உட்பிரிவுவாதமோ பரஸ்பரப் பகைமைகளோ இல்லாத ஒரு நிலையில் நமது அண்ணல் நபிகளார் இவ்வுலகை விட்டுச்சென்ற சமயத்தில் நிலவியது போன்றதொரு காலத்திற்கு அவை நம்மை இட்டுச்செல்லும். “ஜனநாயகம்” என்று கூறப்படுவதையும், அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான குறுக்குவழி ஜனநாயக மாதிரிகளையும் கைவிடுகிறோமெனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதே தர்க்க ரீதியான அடுத்த நடவடிக்கையாக இருக்கும். இவ்விரு மாற்றங்களும் சாதிக்கப்படவில்லை என்றால், அவற்றை அகவயப்படுத்தி நடைமுறைப்படுத்தவில்லை என்றால், வன்முறை தொடரவே செய்யும். அதன் மூலம் வேறு ஏதேனுமொரு புரட்சி வேண்டுமானால் சாத்தியமாகலாம்; கண்டிப்பாக இஸ்லாமியப் புரட்சி சாத்தியமாகாது. குறைபாடுகளும் முரண்பாடுகளும் நிறைந்ததாக நமது இதயங்களிலுள்ள உலகநோக்கை மாற்றுவதற்கு, அகவயப்படுத்துவதற்கு, சீர்திருத்துவதற்கு வேண்டுமானால் நீண்டதொரு காலம் தேவைப்படலாம்; ஆனால், விவாதம் மற்றும் திறந்த மனத்தைக் கொண்டு அது செய்துமுடிக்கப்பட்ட பின், நமது உலகியல் நிலைமைகளை மாற்றுவதற்கு உண்மையில் மிகச் சுருக்கமானதொரு காலமே தேவைப்படும். இந்தக் காலவியல்பு நபிகளாரின் சீறாவில் மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.

Privacy Policy  |  Terms of Use
Copyrights © 1436 AH
Sign In
 
Forgot Password?
 
Not a Member? Signup

Loading...