முஸ்லிம் மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் The intellectual challenge facing the Islamic movement: decolonizing the Muslim mind (Tamil)

Empowering Weak & Oppressed

Yusuf Al-Khabbaz

Ramadan 11, 1430 2009-09-01

by Yusuf Al-Khabbaz

இன்று ‘மூன்றாம் உலகு’ என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளை ஐரோப்பிய-அமெரிக்க சக்திகள் பலாத்காரமாக பௌதிக ரீதியில் பிடித்துவைத்து, அவற்றின் வளங்களை நம்பவொண்ணா அளவில் சுரண்டிவந்த ஒரு வரலாற்றுக் காலகட்டமே 'காலனித்துவம்' என்று பெரும்பாலும் தற்போது புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது.

மேற்கத்திய சக்திகளின் இந்த அமைப்பு ரீதியான கொள்ளை ஸ்பெயினிலிருந்து துவங்கியது. அந்தலூஸியாவில் இருந்த இஸ்லாமிய ஃகிலாபத்தை அழித்து, அதனிடமிருந்து களவாடிய தங்கத்தையே அமெரிக்க கண்டங்கள் நெடுகிலுமான தனது சாகசங்களில் ஸ்பெயின் முதலீடு செய்தது. (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: ‘இஸ்லாமிய கிலாபத்’ என்ற சொல்லாடலைக் காட்டிலும் ‘முஸ்லிம் மன்னராட்சி’ என்பதே இங்கு பொருந்துகிறது). ஸ்பானிஷ் காலனித்துவம் விரைவிலேயே மற்ற காலனித்துவ சக்திகளின் தோற்றத்திற்கு வழிகோலியது.

இவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எல்லாம், உலகின் பெரும்பகுதி பௌதிக ரீதியில் ஐரோப்பாவினாலும் அமெரிக்காவினாலும் காலனியாதிக்கச் சுரண்டலுக்கு ஆட்பட்டு விட்டது. (அமெரிக்காவும் கூட ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்து, பிறகு தானுமொரு காலனித்துவ சக்தியாக உருவெடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது).

நேரடியாகவும் எளிமையாகவும் கூறுவதென்றால், கொள்ளையடித்தல் தான் எப்போதும் காலனித்துவத்தின் பிரதான வினையூக்கியாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், காலனித்துவத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் தனிப்பட்டளவில் அதுவே முதன்மைக் காரணமாக இருந்திருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. பேராசையும் இனவெறியும் அதில் மாறாது இடம்பெற்றிருந்தன; அறுதி நோக்கமாக கொள்ளையடித்தல் இருந்தது. என்றாலும், இவையல்லாத பிற காரணிகளும் அதில் முக்கியப் பாத்திரத்தை வகித்துள்ளன.

கிறிஸ்தவ மிஷனரிகளைப் பொறுத்தவரை, அதற்கு முன்பு அணுகவியலாது இருந்த ‘மிலேச்சர்களை’ அணுகிடும் வழியினை காலனித்துவம் ஏற்படுத்தித் தந்தது. இம்மிலேச்சர்கள் மேற்கத்திய பாணி கிறிஸ்தவத்தின் ‘நாகரிகப்படுத்தும்’ இலட்சியப் பணிக்கு மிகப் பொருத்தமானோராகக் கருதப்பட்டனர்.

சாகசப் பயண விரும்பிகளைப் பொறுத்தவரை, காலனித்துவ திட்டவிளக்க அறிவிப்பின் முக்கிய அம்சமாக இருந்தது ‘சாகசப் பயணம்’ ஆகும். (அது இன்று ‘இன்பச் சுற்றுலா’ – Tourism என்று அறியப்படுகிறது).

உண்மையில், வெவ்வேறு காலப்பிரிவுகளில் வெவ்வேறு காலனியவாதிகளின் செயல்பாடுகளுக்கு வெவ்வேறு செயல்நோக்கங்கள் இருந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, அவை அனைத்தையும் ‘காலனித்துவம்’ என்ற ரீதியில் மாத்திரம் பேசுவது பிழையான முடிவுகளுக்கு இட்டுச்செல்வதாக அமைந்துவிடக் கூடும். (எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் அவை ஒரேவிதமாக இருக்கவில்லை) காரணம், யதார்த்தத்தில் காலனித்துவத்தைப் பல்வேறு காலஇடச் சூழமைவுகளில் வைத்துப் பரிசீலிக்க முடியும்.

உதாரணமாக ஜப்பானை எடுத்துக் கொண்டால், அது காலனித்துவ ஆட்டத்தில் தாமதமாகவே வந்திணைந்தது. அது மட்டுமின்றி, காலனியத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் அது ஒருவிதத்தில் வித்தியாசமான வழிமுறையைக் கொண்டிருந்தது. (அவ்வழிமுறை கொடூரத்திலொன்றும் குறைந்ததாக இருக்கவில்லை என்பது தனிக்கதை). மற்ற காலனித்துவச் சக்திகளோடு ஜப்பான் மேற்கொண்ட போட்டிதான் இரண்டாம் உலக யுத்தத்தின் (1939-1945) கிழக்காசியக் களமாக மாறவிருந்ததன் முக்கிய அம்சமாக இருந்தது என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற இரு பேரழிவு ‘உலக யுத்தங்கள்’ ஐரோப்பாவையும் ஜப்பானையும் ஏறத்தாழ முற்றாகத் தரைமட்டமாக்கி காலனித்துவச் சக்திகளை நலிவடையச் செய்தன. (அமெரிக்கா மட்டும் இதற்கு விதிவிலக்கு; உண்மையில் அமெரிக்கா இந்த யுத்தங்களால் வலுவடைந்தது என்றே கூறவேண்டும்; மேலும் நீண்டதொரு காலம் அதனால் தனது காலனித்துவ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது).

1945-க்குப் பிறகு, ‘விடுதலை’ இயக்கங்களின் ஓர் அலை எழுச்சிபெற்றது. காலனித்துவ சக்திகள் பௌதிக ரீதியில் அகன்று சென்ற காலமே ‘விடுதலை’ என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. எனினும் சுகாதாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் பிற துறைகள் என அனைத்திலும் காலனியவாதிகள் என்னென்ன அமைப்புமுறைகளை ஏற்படுத்தி வைத்திருந்தார்களோ அவற்றையே இவ்விடுதலை இயக்கங்களும் தக்க வைத்துக் கொண்டன. முன்னர் காலனியப்பட்டிருந்துவிட்டு இப்போது புதிதாகச் ‘சுதந்திரம் பெற்றிருக்கும்’ மக்கள், முன்னர் காலனியவாதிகள் எதை நோக்கமாகக் கொண்டிருந்தனரோ அதற்கு வெகுமாற்றமாக எதையும் செய்துவிடக் கூடாது என்பதை அவை இதன் மூலம் உத்தரவாதம் செய்து கொண்டன.

இதன் ஊடாக, ‘மூன்றாம் உலகு’ தொடர்ந்தும் மேற்குலகுக்கு கீழ்ப்படிவானதாகவே இருக்கும்படி செய்யப்பட்டது. துவக்கத்தில் ‘மூன்றாம் உலகு’ மீது நேரடிக் காலனியத்தின் கீழ் திணிக்கப்பட்ட கொள்கைகளையும் வாழ்முறைகளையும் அப்படியே தொடர்ந்திடச் செய்யும் இத்தகைய சூழலே பொதுவாக ‘மனோவியல் காலனித்துவம்’ என்றழைக்கப்படுகிறது.

இக்கட்டுரையின் தலைப்பு கூகி வா தியாங்கோ1 என்ற கென்ய கல்விப்புலச் செயல்பாட்டாளரின் நூற்தலைப்பிலிருந்து (“மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல்”) எடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க இலக்கியச் சூழலில் காலனித்துவப் பிரச்சினையை இனம்கண்டு, உள்ளூர் மொழிகளையும் அறிவையும் புத்தாக்கம் செய்வதற்காக உழைத்தவர் இவர். கூகி 1950-கள் முதல் 1970-களின் இறுதி வரையான காலப்பிரிவில் வளர்ந்தெழுந்த பரந்த காலனித்துவ நீக்க இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்.

அக்காலப்பிரிவினை தேசிய விடுதலை இயக்கங்களின் உச்சகட்டம் எனலாம். அக்காலப்பிரிவைச் சேர்ந்த பல்வேறு நூல்கள் இன்றும் பொருத்தப்பாடு மிக்கவையாகவே நிலைத்திருக்கின்றன. அல்ஜீரிய மனோவியல் நிபுணரான ஆல்பர்ட் மெம்மி எழுதிய ‘காலனியப்படுத்துவோரும் காலனியப்படுவோரும்’ என்ற நூல் பின்வருமொரு வாதத்தை முன்வைக்கிறது:

“காலனித்துவம் உண்மையில் காலனியப்படுத்துவோர்-காலனியப்படுவோர் இரு சாராரையும் அழித்துவிடுகிறது; இறுதியில் அதனால் ஒருவருக்கும் பயனிருப்பதில்லை.”

ஜலால் ஆலே அஹ்மதின் செவ்வியல் ஆக்கமான ‘ஆக்ஸிடென்டோஸிஸ்’ (‘மேற்கு மோகம்’) எனும் நூல், மனோவியல் காலனித்துவத்தின் ஒரு வடிவமென நோக்கத்தக்க விடயம் பற்றி விவரிக்கிறது. ‘மூன்றாம் உலக’ மக்கள் தமது சொந்த வரலாறு, கலாச்சாரம், மனோபாவம், மரபுகள் ஆகியவற்றைப் பலிகொடுத்து மேற்குலகின் மோகவலையில் தம்மை வீழச்செய்யும் ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு இருக்கின்றனர் அல்லது பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் எனுமொரு கருத்தினை அவர் அந்நூலில் ஈரானியச் சூழமைவில் வைத்து விருத்தி செய்திருக்கிறார்.

அக்காலப்பிரிவைச் சேர்ந்த இதையொத்த இன்னபிற பல ஆக்கங்கள் அனைத்தும் ‘மனோவியல் காலனித்துவம்’ என்றழைக்கத்தக்க விடயம் குறித்து விளக்குபவையாக அமைந்துள்ளன. அந்நூல்கள் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் விளக்கியுரைத்தவற்றுள் பெரும்பாலானவை இன்றும் பெரிதாக மேம்பட்டுவிடவில்லை. சிலவோ முன்பிருந்ததைக் காட்டிலும் மோசமடைந்திருக்கின்றன. அவ்வாக்கங்களுள் சிலவற்றைப் படிப்பதற்கு ஆர்வமிருந்தும் அவற்றை அணுக வழியில்லாத வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி: மல்டிவெர்ஸிடி குழும வலைத்தளத்தில்2 அவற்றுள் சிலவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலனித்துவம் என்பது (முஸ்லிம் உலகினை உள்ளடக்கி) ‘மூன்றாம் உலகு’ என்று இன்று அழைக்கப்படுவதன் நலன்களுக்கு உகந்ததல்ல என்று நம்பும் அனைவருக்கும், ‘மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல்’ என்பது முக்கியத்துவம் வாய்ந்தவொரு செயற்பாடாக இருக்கிறது.

எனினும், வேறொரு வகையினர் இருக்கின்றனர்; அவர்களுக்குக் காலனித்துவம் குறித்து எவ்வித முறையீடுகளும் இல்லை —பிரிட்டிஷ்-அமெரிக்க வடிவிலான காலனித்துவமாயினும் அல்லது பிற வடிவங்களில் அமைந்த காலனித்துவமாயினும் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, இம்முழு விவாதமும் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

இதுவும் காலனித்துவத்தின் ஒரு சாதனை தான். அதாவது, காலனித்துவம் உள்ளூர் மேட்டுக்குடிகளைத் தன்வயமாக்கிக் கொண்டு ‘சுதந்திரத்திற்கு’ பிறகு, “சுதேசிகளின் நலன்களைப் பேணுதல்” எனும் போர்வையில் அம்மேட்டுக்குடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும்படி செய்திருக்கிறது. கடந்த காலத்தைப் போன்றே இன்றும் தமது முன்னாள் காலனிகளின் வளங்களைத் தொடர்ந்து சூறையாடி வரும் காலனியவாதிகளின் நலன்களைப் பாதுகாப்பதைத் தான் இம்மேட்டுக்குடிகள் செய்துவருகின்றனர் என்பதே உண்மை.

இக்கொள்ளையில் உள்ளூர் மேட்டுக்குடிகளும் பலனடைவதால் காலனித்துவ நீக்கம் செய்வதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட அவர்களுக்குப் புலப்படுவதில்லை. எனினும் ஒருவர் இன்றைய உலகு மீதொரு பார்வை செலுத்துவாரெனில், மற்றொரு காலனித்துவ நீக்கப் பேரலை தோன்றி மேற்குலகுக்கு முன்னால் கடினமான அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பதை காண்பார்.

மேற்குலகு “முன்னேற்றம்”, “நாகரிகம்” போன்றவற்றை கொண்டு வருவதாக கூறிவந்தது. எனினும் உண்மையில் அது கொண்டு வந்ததென்னவோ, மூன்றாம் உலகு மீது தனது மேலாதிக்கத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் அமைப்புமுறையை மட்டும் தான். காலனித்துவம் உள்ளூர்க் கலாச்சாரங்களையும் மருத்துவம், வேளாண்மை, கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்தல் மற்றும் அறிதலின் உள்ளூர் வழிமுறைகளையும் அழித்து நாசமாக்கியது.

இன்று மூன்றாம் உலக மக்கள் தமது பூர்விக அமைப்புகளைப் பதிலீடு செய்திருக்கும் காலனித்துவ அமைப்புமுறைகளைச் சவாலுக்குள்ளாக்கி, தமது சொந்த அறிவமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளைத் தேடிவருகின்றனர். இது புதியதொரு இயக்கமல்ல; உலகில் இன்று நடைபெற்றுவரும் காலனித்துவ நீக்க இயக்கம், உண்மையில் வெகுமுன்னரே துவங்கியவொரு தோற்றப்பாடு என்பதை நினைவில் இருத்துவது முக்கியம்.

இது பலவிடங்களிலும் ‘உள்ளூரை’ (local) நோக்கியவொரு இயக்கமாகவே இருக்கிறது. இந்த உலகமய யுகத்தில் எதுவொன்றும் முற்றாக உள்ளூர் இயல்பினதாக இருக்க முடியாது என்பது உண்மைதான். எனவே, அதுவோர் பரந்த நோக்கைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். உண்மையில், உடலையும் மனதையும் காலனித்துவ நீக்கம் செய்வதைத் துவங்குவதற்கான நிச்சயமானதொரு வழிமுறை யாதெனில், ‘தேசிய அரசுகள்’ - ‘தேசிய விடுதலை’ போன்றவற்றின் பொறியல் சிக்காமல் அவற்றுக்கு அப்பால் நின்று சிந்திப்பதாகும்.

காலனியவாதிகளிடம் இருந்து பௌதிக ரீதியில் விடுதலை அடைந்த பிறகு புதிய ‘சுதந்திர’ அரசுகள் பெரும்பாலும் காலனியவாதிகள் நிறுவிய அதே கோட்டிலேயே பயணிக்கின்றன என்பதே வரலாறு காட்டிநிற்கும் பாடமாகும். இதைத் தான் ஜான் மோஹாக் எனும் பூர்விகக்குடி அமெரிக்க (செனிகா) மெய்யியலாளர் விளக்கி உரைத்திருக்கிறார்.

அதாவது, குடிமைத்துவம் மூன்று தரங்களில் அமைகின்றது.

முதல் தரத்தினர் ‘நல்ல அடிமைகள்’; காலனியவாதிகளால் திணிக்கப்பட்ட சிந்தனைகளையும் செயல்பாட்டு முறைகளையும் கேள்வியின்றி அப்படியே பின்பற்றுபவர்கள்.

அடுத்த தரத்தினர் ‘கெட்ட அடிமைகள்’; இத்தகையவர்கள் காலனித்துவப் பிடியிலிருந்து பௌதிக ரீதியில் விடுதலை கோருவார்கள். எனினும், அவர்கள் அதிகாரத்திற்கு வரும்வேளை பெருமளவு காலனியவாதிகள் ஏற்டுத்தித்தந்த முறையிலேயே சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்; காலனியத்தின் கீழ் திணிக்கப்பட்ட அதே அறிவியல், பொருளாதார, சுகாதார, கல்வி அமைப்புமுறைகளையே பயன்படுத்துவார்கள். அநேக தேசிய விடுதலை இயக்கங்களும் இவ்வகைப்பாட்டின் கீழேயே வருகின்றன. அவற்றின் இலக்கு இது தான்: கட்டுப்பாட்டை வென்றெடுத்தல், கொஞ்சம் குறைகூறுதல், எனினும், உண்மையில் பெரிதாக எதிலும் மாற்றம் ஏற்படுத்தாதிருத்தல்.

இறுதியாக, ‘அடிமை-அல்லாதோராக’ மாறுவதற்கு —அதாவது மேற்கத்தியச் சட்டகத்திற்கு வெளியே, காலனித்துவத்துக்கு வெளியே சிந்திக்கவும் செயல்படவும்— நமக்குள்ள வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியப்பாடுகளை மோஹாக் கண்டுணர்த்துகிறார். இவ்வழிமுறைகள் மேற்குலகுக்கு வேண்டுமானால் விளங்காதவையாக இருக்கக்கூடும்; இதையொரு நேர்மறைப் பண்பாகவே மோஹாக் காண்கிறார்.

முதலிரு சாத்தியப்பாடுகளும் மேற்குலகைச் சுற்றிப் பரிணமிப்பவையாக இருக்கும் அதே சமயம், மூன்றாவதோ தனது சொந்தக் கோளத்திற்கு உள்ளாகப் பரிணமிக்கிறது.

காலனியப்பட்ட மனங்களைத் தொடர்ந்தும் அவ்விதமே வைத்துப் பேணுவதில் மேற்கத்தியக் கல்வி முக்கியமானதொரு காரணியாகத் திகழ்கிறது. எந்தளவுக்கெனில், ஒரு முறைசார் மேற்கத்தியக் கல்வி இல்லாமல் உயிர்வாழ்வதை கற்பனைசெய்வது கூட மக்களுக்கு மிகக் கடினமானதாக, அசாத்தியமானதாக மாறியிருக்கிறது.

இங்கு கேட்கப்பட வேண்டிய அதிமுக்கியக் கேள்வி யாதெனில், “கல்வியின் குறிக்கோள் என்ன?” இக்கேள்விக்கு விடையளிக்க முனைந்தால், “நான் எத்தகையதொரு மனிதனாக இருக்க விரும்புகிறேன்?” என்பது போன்ற இன்னும் பெரிய கேள்விகளுக்கு அது இட்டுச்செல்கிறது. சிலர் அமெரிக்கராகவோ பிரெஞ்சுக்காராகவோ பிரிட்டானியராகவோ இருக்க விரும்புகின்றனர். எனவே, அக்குறிக்கோளுக்கு பொருத்தமானதொரு பள்ளிக்கல்வி வடிவத்தை அவர்கள் தெரிவுசெய்கின்றனர். அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அது நற்பலன் அளிக்கக் கூடுமென்றாலும், மற்றவர்களின் நலன்களுக்கும் அதுவே உகந்ததாக இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை.

அதற்கும் அப்பால், மேற்குலகில் ஒருவர் பெறும் பள்ளிக்கல்வியானது பிறவிடங்களில் உள்ள கல்வியைக் காட்டிலும் ஏதோவொரு வகையில் சிறந்தது என்ற கற்பிதமும், நிச்சயமாக காலனியத்தின் அழுத்தமான மாயையே அன்றி வேறில்லை.

கல்வியின் குறிக்கோள் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது, “மேற்கு தான் சிறந்தது” (West is Best) என்ற காலனிய மந்திரத்திற்கு அப்பால் பார்வையைச் செலுத்துவதற்கு உதவக் கூடும். மேலும், பின்வருவதே உண்மையில் நிகழ்ந்திருக்கிறது என்ற மெய்யுணர்தலுக்கும் அது பெரும்பாலும் இட்டுச்செல்லக் கூடும்:

அதாவது அறிவு, புரிதல் ஆகியவற்றின் அனைத்துப் பிற வடிவங்களையும் காலனித்துவம் திட்டமிட்ட முறையில் பெறுமதியிழக்கச் செய்திருக்கிறது; இதனாலேயே, காலனியப்பட்ட மக்களால் அறிவையும் அகப்பார்வையையும் மேற்குலகில் தேடுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் ஏதுமிருப்பதாக காணமுடிவதில்லை.

காலனியப்பட்ட மனதுடன் வாழும் சூழலை நிலைபேறுடையதாக ஆக்குவதில் பல்வேறு ‘தகவல்தொடர்பு’ ஊடகங்களும் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன. அவை பொதுவாக இரண்டு காரியங்களைச் செய்கின்றன:

ஒன்று - காலனித்துவத்தின் கீழ் இவ்வுலகை ஆண்ட சிந்தனைகளையும் அசமத்துவங்களையும் நிலைபேறுடையவையாக ஆக்குவது;

இரண்டு - காலனித்துவத்தைப் புதிய வடிவங்களில் அறிமுகப்படுத்துவது. இப்புதிய வடிவங்கள் காலனியத்தின் பூர்விக வடிவங்களோடு குறைவாகவே நேரடித் தொடர்புகொண்டவையாக இருந்தாலும், அவற்றுக்குச் சற்றும் சளைக்காத விதத்தில் சேதம் விளைவிப்பவையாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு, ஊடகம் நுகர்வியத்தை அறிமுகப்படுத்துகிறது. அது காலனியத்தின் மற்றுமொரு வடிவமேயன்றி வேறில்லை. எப்படியென்றால், நுகர்வியமானது உலகக் கார்பரேட்டுகளுக்கு நலன்பயக்கும் ஒரு பொருளாதார அமைப்பை அறிமுகம் செய்கின்றது. பெரும்பாலான பெருவர்த்தக நிறுவனங்கள் முன்னாளையக் காலனித்துவ அதிகாரக் கட்டமைப்பின் மீதே நிறுவப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, பல்வேறு வழிகளிலும் அவை இன்றைய காலனித்துவத்தின் முகவர்களாகவும் மாறியிருக்கின்றன. எனவே, ஒருவர் ஊடகத்தையும் காலனித்துவத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஊடகம் எவ்வாறு இன்று நுகர்வியத்தையும் கார்பரேட் அதிகாரத்தையும் ஊக்குவிக்கிறது என்பதையும்; நுகர்வியம் எவ்வாறு பெரும்பாலும் கார்பரேட்டுகளின் ஊடாக முன்னாள் காலனித்துவச் சக்திகளுக்கு நலன்பயக்கிறது என்பதையும்; மேலும், அது எவ்வாறு பிறரையும்—மிகவும் வரையறுக்கப்பட்ட, போலியான முறையில்—இந்நலன்களில் பங்கெடுத்துக்கொள்ளத் தூண்டுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு குறிப்பிட முடியும்.

அனைத்திற்கும் முதலாக: அல்-ஜஸீரா, அல்-அரபிய்யா போன்ற பிராந்திய ‘சுதந்திர’ செய்தி ஊடகங்கள் தமது மேற்கத்தியச் சரிநேர் இணைகளான CNN, BBC ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க விதத்தில் மாறுபட்டவை என்பது பிழையான கற்பிதமே அன்றி வேறில்லை.

இப்பிராந்திய ஊடகங்கள் அடிப்படையில் ‘கெட்ட அடிமைகள்’ வகையைச் சேர்ந்தவை. அதாவது, இவை காலனியத்தைக் கொஞ்சமாகக் குறைகூறும். அதே சமயம், அதன் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன.

இந்த ஊடகங்கள் உருச்சிதைக்கப்பட்ட முஸ்லிம் உடல்களின் படிமங்களை மேற்கத்திய ஊடகங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் காண்பிக்கக் கூடும்; மேற்கத்திய ஊடகங்கள் அவற்றின் இருப்பையே கூட ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை என்பது உண்மை தான். எனினும், இறுதியில் இவையும் தொலைக்காட்சியின் ஊடாக உலகைப் பார்க்கின்ற முறையையும்; பேச்சு மற்றும் உரையாடலின் பாணி, வடிவம் என அனைத்திலும் மேற்கத்திய ஊடகத்தை ஏறத்தாழ அச்சுஅசலாகப் ஒப்பிப் பின்பற்றுவதையுமே நிலைபேறுடையதாக்குகின்றன.

இவை தெரிவுசெய்யப்பட்ட உள்ளடக்கங்கள் சிலவற்றில் மட்டுமே அவ்வப்போது வேறுபடுகின்றன. இது காலனித்துவம் இல்லையா? செய்திகளையும் தகவல்களையும் வேறு வழிகளில் எத்திவைப்பதற்கான சாத்தியப்பாட்டை இது நீக்கிவிடுவதில்லையா? வேறு வடிவங்களில் அமைந்த தகவல்தொடர்புகளை வெகுஜன ஊடகங்கள் இன்று பதிலீடு செய்திருக்கின்றன என்பது உண்மை இல்லையா?

பொழுதுபோக்கு, விளம்பரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இவ்வெகுஜன ஊடகங்கள் மக்களின் “மனோவியல் சூழலின்” பிரிக்கமுடியாத பகுதியாக அமைந்துள்ளன. அடிப்படையில் மற்றெல்லா முறைகளையும் பலிகொடுத்து ஒற்றை முறையில் சிந்திக்கும் சில சக்திகளாலேயே இம்மனோவியல் சூழல் கட்டுப்படுத்தவும் வடிவமைக்கவும் படுகின்றது. இது தான் காலனித்துவம்.

முஸ்லிம் உலகு அடங்கலான முன்னாள் ‘மூன்றாம் உலகை’ இன்று ஆட்சிசெய்யும் பெரும்பாலான ‘சுதந்திர’ அரசுகள் தம்முடைய இளைஞர்களின் மனங்கள் மீது ஊடகங்களால் நிகழ்த்தப்பெறும் காலனிய மயமாக்கத்தில் பங்காளிகளாகவே இருக்கின்றன. தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்றவற்றின் வழியாக மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதைக் கொண்டு மனோவியல் சூழலை நிறைப்பதை அவை அனுமதித்து வருகின்றன.

வடஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, பாகிஸ்தான், மலேசியா மற்றும் இன்னபிற இடங்களில் வாழும் முஸ்லிம் சமூகங்கள் உட்பட, உலகம் நெடுகிலும் ஊக்குவிக்கப்படும் சிற்றின்ப வேட்கை கலாச்சாரத்தை தடுப்பதற்கான அதிகாரம் இவ்வரசுகளுக்கு இருப்பதில்லை.

இன்னும் வருந்தத்தக்கது என்னவென்றால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று பாடகர்களையும் நடிகர்களையும் பற்றி சகலத்தையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஓயாமல் தொடரும் ஃபலஸ்தீனப் போரட்டம் பற்றியோ, அல்லது ஈராக் மீதான காலனித்துவ ஆக்கிரமிப்பு பற்றியோ பெரிதும் அலட்சியம் காட்டுபவர்களாகவோ அல்லது குறைவாக அறிந்து வைத்திருப்போராகவோ தான் இருக்கின்றனர்.

எனினும், இப்பிரச்சினைகளின் தீர்வுகளுக்காக நாம் அரசுகளை நோக்குவதும் கூட பிரச்சினையின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும். காரணம், இன்றைய அரசுகளில் ஏறத்தாழ அனைத்துமே ஒன்று நல்ல அடிமைகளாக, அல்லது கெட்ட அடிமைகளாகவே இருக்கின்றன. அதாவது, காலனிய அமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கின்றன.

இவ்வாறிருக்க, ‘அடிமை-அல்லாதோர்’ மீது மட்டுமே நம்பிக்கை எஞ்சியிருக்கிறது. இன்றைக்கு மேற்கு அல்லாத சமூகங்களை ஆக்கிரமித்திருக்கும் காலனித்துவம், நவீனத்துவம், உலகமயமாக்கம் உள்ளிட்ட சகல அமைப்புமுறைகளின் ஆதிக்கத்தையும் தாண்டிச் சிந்திக்கவும் செயல்படவும் திறன்படைத்தது அவர்கள் மாத்திரமே.

எனினும், இராணுவத்தையும் பொருளாரத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் இவ்வரசுகள் ஓரளவு அதிகாரத்தை தம் கரங்களில் வைத்துள்ளது உண்மை தான். எனவே, அவற்றை நம்மால் முற்றாக அலட்சியம் செய்துவிடவும் முடியாது.

எனினும், உள்ளூர் அரசுகள் வரையறுக்கப்பட்ட ஜனநாயகத்தை நோக்கி நகருகின்ற போதும், வெகுஜன அரசியல் பங்கெடுப்பின் புதிய வகைகள் தோற்றம்பெறுகின்ற போதும், அவை தமது பொருளாதார அமைப்புக்கு அர்த்தம் மிகுந்த வகையில் சுதந்திரமாகத் தீர்மானங்கள் எடுக்கமுயலும் வேளைகளிலும் காலனித்துவம் ‘பொருளாதார உலகமயம்’ என்ற வடிவில் இத்தேசிய அரசுகளுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் தவறாமல் ஈடுபட்டு வருகின்றது.

இது காலனித்துவத்தின் ஒரு கொடூர நகைமுரணே அன்றி வேறில்லை.

மனோவியல் காலனித்துவத்தில் மொழிகென்று ஒரு பாத்திரமுண்டு. இதனிக் கையாளுவது சற்று கடினமானதொரு பிரச்சினையாகும். இன்று காலனித்துவத்துடன் பெருமளவில் இணைத்துப் பார்க்கப்படும் மொழியாக இருப்பது ஆங்கிலம். எண்ணற்ற உள்ளூர் மொழிகளைப் பலிகொடுத்து அது இன்று அதிவேகமாக ஓர் ‘உலக மொழியாக’ மாறிவருகிறது.

எல்லா மொழிகளும் சடப்பொருட்களையும் வாழ்வனுபவங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவகஅணி, சொல்லாட்சிக் கலை ஆகிய கட்டமைவுகளைப் பயன்படுத்தி யதார்த்தத்தை தமக்கே உரிய விதத்தில் உருமாற்றுகின்றன. இதில் ஆங்கிலமும் மாறுபட்டதில்லை. ஒருவர் முற்றாகக் காலனித்துவ நீக்கம் அடைய வேண்டுமெனில், அவர் ஆங்கிலமல்லாத மற்றொரு மொழியைக் கற்கவோ அல்லது மீள்கற்கவோ வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே இதனை மெய்யுணர்ந்த கூகி வா தியாங்கோ, ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு தனது மக்களின் உள்ளூர் ஆப்பிரிக்க மொழிகளில் எழுதுவது என்று தீர்மானித்தார். கென்யாவில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை நிறுவுவதிலும் ஈடுபட்டார்.

அன்றைய கென்ய அரசு தனது முன்னாள் காலனிய எஜமானர்களிடம் இருந்து “சுதந்திரம்” அடைந்துவிட்டிருந்த போதும், கூகியின் இவ்வியக்கத்தை தமது தேசிய மேலாதிக்கத்துக்கு எதிரானவோர்அச்சுறுத்துலாகவே பார்த்தது. எனவே, அவர் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

அவரது கதையிலிருந்து இரண்டு விடயங்கள் தெரியவருகின்றன.

ஒன்று: அறுதியில் மொழி காலனித்துவத்தின் ஒரு முக்கிய அம்சம் என்பதை அங்கீகரித்து, அதன் மீது செயலாற்றத் தீர்மானம் கொண்டோர் சிலர் இருக்கவே செய்கின்றனர்;

இரண்டு: தேசிய அரசுகள் உண்மைக் காலனித்துவ நீக்கம் குறித்து அஞ்சுகின்றன —அவை ‘சுதந்திர’ அரசுகளாக இருப்பினும் சரியே.

உதாரணமாக, முஸ்லிம்கள் வாழும் நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்களின் எதேச்சதிகார விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு விழுந்தடித்துக் கொண்டு உள்ளூர் மொழிகளையும் கலாச்சாரங்களை பலிகொடுக்கும் விதமாகப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் திருத்தங்களைச் செய்துவருகின்றன; மூடத்தனமான பொழுதுபோக்குகளை ஊக்குவித்து வருகின்றன. இது இன்று மிகவும் கவலைக்குரியதொரு வகையில் தெள்ளத்தெளிவாகி வருகின்றது.

ஒரு விதத்தில் கூறின், நமது பூமிகள் ஆக்கிரமிப்பின் கீழிருப்பது போன்றே நமது மனங்களும் ஆக்கிரமிப்பின் கீழிருக்கின்றன. இது மாறாத விழிப்புடன் கவனித்துவர வேண்டியதொரு பிரச்சினையாகும். இது குறித்து நித்தம் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டியுள்ளது.

நமது மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதை நோக்கிய ஒரு முக்கிய காலடி என்னவென்றால், சகல மதங்களும் போதிக்கும் உயர் மெய்மைகள் நோக்கி நமது கவனத்தைக் குவிப்பதாகும்.

ஏனெனில், இவ்வுலக வாழ்க்கையே ஆகப்பெரிய காலனியவாதியாக இருக்கிறது. எளிமையாகக் கூறுவதெனில், ஒரு காலனியப்பட்ட மனது இவ்வாறு சிந்திக்கிறது: உலகை ஆட்டுவித்துக் கொண்டுள்ள பேராசை பிடித்த மேட்டுக்குடிகளின் நலன்களாக எவை இருக்கின்றனவோ அவைதாம் உண்மையில் மற்றெல்லோரது சிறந்த நலன்களாகவும் இருக்கின்றன.

இச்சிந்தனை உலகாசை என்ற கதவின் ஊடாகவே முதலில் நுழைகிறது. இந்நலன்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைத் தடமறியவும், அவற்றின் கவர்ச்சிகளை விட்டுத் தவிர்ந்து கொள்ளவும் உள்ள மிக எளியதொரு வழி என்னவென்றால், நமது மிகச் சாதாரணமான நடவடிக்கைகளிலும் கூட உண்மையில் இதில் “நலனடைவது யார்?” என்ற எளிய கேள்வியைக் கேட்டுப் பார்ப்பதாகும். இக்கேள்வியினை பல வழிகளில் கேட்கவும் பதிலளிக்கவும் முடியும்.

பல மதங்களிலும் பொதுக்கருவாக அமைந்திருக்கும் ‘அறுதி மோட்சத்தை’ நாம் அடைவதனை நம்முடைய அன்றாடச் செயல்கள் எங்கனம் பாதிக்கின்றன என்பதை நுணுகிப் பார்ப்பது அதிலொரு வழியாகும்.

இதில் நாம் பழங்குடி மக்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். அவர்களும் இப்பிரச்சினையைப் புரிந்து வைத்துள்ளனர். சில பூர்வகுடி அமெரிக்க இனக்குழு மக்கள் மத்தியில், பின்வருமாறு கேட்டுக்கொள்வது முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது (உதாரணமாக, நியூயார்க் மற்றும் ஓன்டாரியோவைச் சேர்ந்த ஹோடெனோசானீ இனக்குழு மக்கள்):

“எனது இன்றைய செயல்கள், இன்றிலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னால் வாழப் போகின்றவர்களை எவ்வாறு பாதிக்கும்?”

மறுஉலகின் மோட்சமோ, இவ்வுலகில் எதிர்காலத் தலைமுறைகளின் நலவாழ்வோ —குறிக்கோள் எதுவாக இருப்பினும்— நமது காலனியப்பட்ட மனங்களை மீள்ஒருமுகம் செய்தல் என்ற சவாலை நாம் எதிர்கொள்வதற்கு பயன்மிக்க வழிகளாக இக்கேள்விகள் அமைகின்றன.

தமது மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதற்கு அவசியமான விதத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட ‘மூன்றாம் உலக’ மக்களால் சிந்திக்க முடியாததற்குள்ள ஒரு காரணம், அவர்கள் தமது சொந்த மரபுகளையே பின்பற்றுவது இல்லை; மதிப்பதும் கூட இல்லை. இது பகுதியளவு காலனித்துவத்தால் விளைந்தவொரு விளைபலனே:

பிற்போக்குவாதிகள், காட்டுமிராண்டிகள், வன்முறையாளர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நம்மை நோக்கிக் கும்பலாக இடையறாது கூறப்பட்டு வருவதன் காரணத்தால் நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டிருக்கிறோம்; நம்மைக் குறித்து நாமே நிச்சயமற்றவர்களாகி விட்டிருக்கிறோம். நாம் யார் என்பது குறித்து நாமே வெட்கம் கொள்வோராக மாறிப்போயிருக்கிறோம்.

எனினும், இத்தகு குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள் யார்? மேற்கத்தேய ‘நாகரிகத்தை’ முன்மொழிபவர்களைக் காட்டிலும் அதிகப் பிற்போக்குத்தனமான, ஒடுக்குமுறை இயல்பு கொண்ட, வன்முறைக் குணமிக்ககவர்கள் எவரும் மனிதகுல வரலாற்றில் இருந்தது கிடையாது.

எனினும், அவர்கள் தான் இன்று நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றனர். கடந்த நூற்றாண்டில் அவர்கள் நடத்திய உலக யுத்தங்களில் அவர்கள் கொன்றொழித்த மக்கள் தான் எத்தனை பேர்? 100 மில்லியன்? 150 மில்லியன்?

முஸ்லிம்கள் மீது ஏதேனும் குற்றம் சாட்டுவதற்கு முன்னர், அவர்கள் ஒருமுறை இன்னும் கவனமாகத் தம்மைத் தாமே பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும். அதை அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ, நாம் செய்தாக வேண்டும்.

பெரும்பான்மை முஸ்லிம்கள் அறிந்துவைத்துள்ளது போல், இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் நெறியாகும்; அது ஓர் அறவியல் நியமமுறையாகவும் ஓர் சட்டத் தொகுப்பாகவும் இருக்கிறது; வெறுமனேயொரு ‘மதம்’ அல்ல அது. காலனித்துவ நீக்கம்பெற்றதொரு வாழ்வின் பகுதியாக இருக்கவல்ல பல்வேறு அம்சங்களை அது தன்னில் கொண்டிருக்கிறது.

எனினும், —அவப்பேறான வகையில் பல்வேறு முஸ்லிம்களும் செய்துள்ளது போன்று— அதையொரு எளிய தஃவா நோக்கில் அறிவுறுத்தல்களின் தொகுப்பாகவோ அல்லது ஹலால்-ஹராம் என்ற ரீதியில் மட்டுமோ நாம் முன்வைக்க முயலக் கூடாது.

மேற்கூறிய சூழமைவுகளுக்கு வெளியே, காலனித்துவ நீக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பயணிக்கு வழங்குவதற்கென்று இஸ்லாத்திடம் நிறைய இருக்கிறது. எடுத்துக்காட்டாக நாம் உண்ணும் முறை, உடுத்தும் உடைகள், வசிக்கும் வீடுகள் ஆகியவற்றைக் உற்றுநோக்குங்கள். ஹலால்-ஹராம் என்ற நோக்கில் பார்த்தால் அவை முற்றிலும் ஏற்கத்தக்கவையாகக் காட்சிதரக் கூடும்.

எனினும், ஒரு நம்பிக்கையாளருக்கென இஸ்லாம் பரிந்துரைத்துள்ள வாழ்க்கை வழிமுறைக்கு இந்த உணவுகளும், உடைகளும், வீடுகளும் எத்துணை நெருக்கமாக அமைந்துள்ளன? ஹலால்-ஹராமுக்கு அப்பால், தனிமனிதர்களும் குடும்பங்களும் இன்றைய உலகில் முஸ்லிம்களாக இருத்தல் என்பதற்குப் பொருளென்ன?

நாம் காணும் எந்தவொரு சூழலுக்கும் ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொண்டு, அதனை நியாயப்படுத்தும் நோக்கில் சில ஹதீஸ்களை இழுத்துக்கொண்டு வருவது தான் அதற்குப் பொருளா? அல்லது ‘நவீனத்துவம்’, ‘நாகரிகம்’, ‘முன்னேற்றம்’ என்பவை குறித்து மெய்யாகவே ஒரு நீண்ட தீவிரப் பார்வையைச் செலுத்தி, நாம் இஸ்லாமிய ஞானத்தின் ஒட்டுமொத்த அமைப்புமுறையின் அடிப்படையில் வைத்து அவற்றைக் கேள்விக்கு உட்படுத்த வேண்டுமா?

மனதைக் காலனித்துவ நீக்கம் செய்தல் என்பது மிகப் பரந்தவொரு பணித்திட்டமாக இருக்கமுடியும். எனவே, பல்வேறு உத்திகளை வளர்த்துருவாக்குவதும்; ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைத் தம்மாலான வழிகளில் செய்வதும் அவசியமாகின்றது.

இதில் அரசுகளோ இன்னபிற பெரிய நிறுவனங்களோ உதவ முடியுமெனில் மகத்தானது; அவ்வாறு முடியாதெனில், அவை பாதையை விட்டு விலகிக்கொள்ள வேண்டும். இந்நிலையில், நாம் சாத்தியமானளவு அவற்றை அலட்சியம் செய்துவிட வேண்டும்.

உதாரணத்திற்கு, உணவு-உடை பற்றி மீள்சிந்திப்பது காலனித்துவ நீக்கம் நோக்கிய பாதையில் பயணத்தைத் துவங்குவதற்கு ஒரு முக்கிய வழிமுறையாக அமையும். காரணம், பல்வேறு சிந்தனையாளர்களும் நிரூபித்துக் காட்டியிருப்பது போல் நாம் எதை உண்கிறோமோ, எவ்வாறு உடுத்துகிறோமோ அது நம்முடைய மனோவியல், பௌதிக, ஆன்மிக நலவாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், காலனித்துவ நீக்கம்பெற முயன்ற பிறருடைய அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வதும், நம்முடைய செயற்பாடுகளின் ஊடாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியம். இதுவும் கூட முதன்மையாகத் தஃவாவை நோக்கமாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, அகம் நோக்கிக் காண்பதற்கும்; தாமிருக்கும் சூழலைப் புரிந்து கொள்வதற்கும்; வெவ்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மரபுகள் ஆகியவற்றைச் சேர்ந்த சகபயணிகளோடு முஸ்லிம்கள் தம்மை இணைத்துக் கொள்வதற்கும் உதவுவதையே அது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

மனதைக் காலனிய நீக்கம் செய்தவது ஓரிரவில் வெற்றிபெறும் ஒரு காரியமல்ல. எனினும், பிரச்சினையின் உண்மை இயல்பைப் புரிந்துகொண்டால் உடனடியாகச் சில காரியங்களைச் செய்யமுடியும். எனவே, என்னால் இயன்ற மட்டும் பிரச்சினையை இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட முயலுகிறேன்:

உலகளாவிய மேட்டுக்குடிகளின் சிறு குழுவொன்று பயன்பெறும் வழிகளிலேயே நாம் அனைவரும் அல்லது நம்மில் பெரும்பாலானோரும் தொடர்ந்து சிந்திக்கிறோம், செயல்படுகிறோம்; அவை நாசகரமான வழிகள்; தர்க்கபூர்வமானவையும் கூட அல்ல.

காலனியம் லாபமடைய வேண்டுமென்பதற்காக நாம் காலனியப்பட்டோராகவே நிலைத்திருப்பதை நிர்பந்திக்கும் வகையில் ‘முன்னேற்றம்’, ‘நாகரிகம்’, ‘உலகமயமாக்கம்’ போன்றவற்றாலும் இன்ன பிற கவர்ச்சி மொழிகளின் பெயராலும் நாம் நமது மானுடம், சுற்றுச்சூழல், மரபுகள், மதங்களை ஆகியவற்றை விட்டு அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறோம்.

இப்பிரச்சினையின் இயல்பையும் நமக்கும் நமது சமூகங்களுக்கும் இழைக்கப்பட்டுள்ளவற்றின் பாரதூரத்தையும் நாம் புரிந்துகொள்ளாது இருப்பதானது, உலகளாவிய மேலாதிக்க மேட்டுக்குடிகளுக்கே நலனாக அமைகின்றது. எனவே, காலனித்துவம் எவ்வாறு உங்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கிறது என்பதை அடையாளம் காணக் கற்றுக்கொள்வதே முக்கியமான முதற் படியாகும்.

* குறைவாகத் தொலைக்காட்சி பார்ப்பவராகவும், அதிகமதிகம் கதை கூறுபவராகவும் மாறலாம்;

* அதிகம் இயற்கை உணவுகளை உண்பவராகவும், இயன்றவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்துக் கொள்பவராகவும் ஆகலாம்;

* கைத்தறி ஆடைகளை அணிபவராகவும், நவநாகரிகப் பித்துக்களைத் துறந்தவராகவும் ஆகி விடலாம்;

* கணிணியின் முன்னால் அமர்ந்தவண்ணம் எழுதுவதன் மூலமோ, வகுப்பறையில் முன்னால் நின்றவண்ணம் மக்களைக் காலனித்துவப் பேருறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தவோ செய்யலாம்.

* கூட்டுச் செயற்பாடுகளை முன்தெரிவு செய்வோர் சுற்றுச்சூழலுக்காகவோ, உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவோ செயலாற்றும் ஏதேனுமொரு இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை ஏராளம். எவரொருவரும் அனைத்தையும் செய்வதென்பது இயலாத காரியம்.

எனினும், குறைந்த பட்சம் ஏதேனுமொரு செயற்பாட்டை தெரிவுசெய்து, அதனைத் துவக்குவதும் முழுமனதோடு அதற்கு அர்ப்பணித்துக் கொள்வதும் அவசியம்.

காலனியப்பட்ட மனங்களைக் கொண்டோருக்குப் பின்வரும் விடயத்தை உள்வாங்கிக் கொள்வது கடினமாக இருக்கலாம்: எனினும், காலனித்துவ நீக்கத்தை நோக்கிய மற்றொரு முக்கியக் காலடி யாதெனில், உங்கள் குழந்தைகளை இயன்றமட்டும் விரைவாகப் பள்ளிகளிலிருந்து வெளியில் எடுப்பதாகும். “பள்ளிக்குச் செல்வதன்” மூலம் “அறிவைத் தேடுதல்”, “கல்வி கற்றல்” போன்ற சகல கற்பனைவாத வீணுரைகளையும் மறந்து விடுங்கள். இவை அறிவைத் தேடுவதற்குள்ள மிக வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் மட்டுமே. பலர் ஏற்கனவே இதனை உணர்ந்து விட்டிருக்கின்றனர்.

உதாரணமாக, இன்று “பள்ளி வெளிநடப்பு” எனப்படுமோர் இயக்கம் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. அது பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள மல்டிவெர்ஸிடி குழும வலைதளத்தைப் பார்வையிடுங்கள்; மேலும், இவ்வியக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு அமைப்பான இராஜஸ்தானில் உள்ள ஷிக்ஷந்தர் அமைப்பின் வலைதளத்தையும் பார்வையிடுங்கள்.

“சமூகத்தைப் பள்ளிநீக்கம் செய்தல்” என்ற இச்செயல்முறை, இவான் இல்லிச் இதே பெயரிலமைந்த தனது முதல்தர நூலில் கூறியது போல் நம்முடைய மானுடத் தன்மையை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டோரிடம் இருந்து அதனை மீட்டெடுப்பதில் இன்றியமையாதவோர் அம்சமாகும். நாம் அவர்களது பள்ளிகளிலும் நிறுவனங்களிலும் முகப்புக் கூடங்களில் அலைந்து கொண்டிருக்கையில், அவர்களோ நமது வளங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர்.

சுகாதார மற்றும் நலவாழ்வு உணர்வை மீளப்பெறுதல் என்பது மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதில் ஆர்வமுடையவர்கள் முன்புள்ள மற்றுமொரு முக்கியப் பணியாகும். உதாரணமாக, ஹோமியோபதியிலும் மரபு மருத்துவத்தின் குறிப்பிட்ட சில வடிவங்களிலும் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், ஏன் புற்று நோயையும் கூட குணப்படுத்த முடிவதைக் காணமுடிகின்றது. இவ்வாறிருக்க, இன்று நாம் மருத்துவரிடம் ஓடிச்சென்று மருந்துச் சீட்டு பெற்றுவரும் நாளாந்திர வலிகள்-நோவுகள் பற்றித் தனியே கூறத் தேவையில்லை.

அதே சமயம், உயர் தொழில்நுட்ப மேற்கத்திய மருத்துவமோ இன்று பல்லாயிரம் கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளவோர் உலக வியாபாரமாக மாறியிருக்கிறது. எனவே, இந்த கார்பரேட் நலன்கள் எவ்வொரு மாற்று மருத்துவத்தையும் —அதிலும் குறிப்பாக அது மலிவாகவும் எளிமையாகவும் இருக்கும் பட்சத்தில் அதனை— ஆதரிக்குமெனத் தோன்றவில்லை. தமக்குப் பணம் ஈட்டித் தருபவற்றையே இந்த கார்பரேட் நலன்கள் எப்பொழுதும் ஆதரிக்கும்.

அது மட்டுமின்றி, ஐரோப்பாவிலும் பாரசீக வளைகுடாவிலும் உள்ள பணம் படைத்தவர்கள் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளையும் பிற சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்வதற்கென்று இன்றுவோர் உலகச் சுற்றுலாத் துறையே இயங்கிவருகிறது. பெரும்பாலான வேளைகளில், அதிகம் செல்வம் படைத்தவர்களே மனது, உடல் இரண்டிலும் அதிகம் நோயுற்றோராக இருக்கின்றனர் என்பதற்கான ஒரு பயனுள்ள செய்முறைக் காட்சி என்பதைத் தவிர, அந்த வியாபாரம் நம்மோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல.

எஞ்சிய நாம் உலகக் கார்பரேட்டுகளின் செல்வாக்குக்கு அப்பாற்பட்ட ஏதேனுமொரு மாற்று மருத்துவம் அல்லது ஹோமியோபதி அல்லது மரபுவழி சிகிச்சை முறையை நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த மரபுகளையும் மருந்துகளையும் துஷ்பிரேயோகத்தில் இருந்தும், தனிக்காப்புரிமையில் இருந்தும் பாதுகாப்பதும் கூட இதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவை பற்றி மூன்றாம் உலக அறிஞர்கள் பலரும் மிகக் கவனமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

உதாரணத்திற்கு இந்தியாவின் வந்தனா ஷிவாவைக் குறிப்பிட முடியும். ஆர்வமுள்ள வாசகர்கள் ‘மூன்றாம் உலக வலையமைப்பு’, ‘பினாங் நுகர்வோர் கூட்டமைப்பு’ (மலேசியா) போன்றவற்றில் இருந்து இத்தகு செயற்பாடுகள் பற்றி இன்னுமதிகம் தெரிந்து கொள்ளலாம். இவ்விரண்டு அமைப்புகளும் மனங்களைக் காலனித்துவ நீக்கம் செய்வதற்கான பயன்மிக்க கருவிகளாக அமையத்தக்க பலவிதமான நிகழ்ச்சிகள், பிரசுரங்கள் ஆகியவற்றைத் தயாரித்துள்ளன.

அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர், திருக்குர்ஆன், இஸ்லாமிய மரபு ஆகியவற்றின் வழியாக நாம் நமக்கெனச் சுயமாகச் சட்டங்கள், கோட்பாடுகள், அறநெறிகள், முன்னுரிமைகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறோம். இவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் நாம் அதீத முக்கியத்துவம் அளிப்பதைக் காணும் ஒருவர் வியப்புக்கே ஆளாவார். நாம் காலனியப்பட்ட மனங்களுடன் வாழ்ந்து வருவதன் பிறிதொரு அறிகுறியே இது.

எனினும், எல்லோருமே முஸ்லிம்களாய் இல்லாதவொரு உலகில் —முஸ்லிம்கள் எல்லோருமே தமது சொந்த ஞானத்தைப் பின்பற்றாதவொரு உலகில்— ஐக்கிய நாடுகள் சபையும் பிற பன்னாட்டு அமைப்புகளும் உலகளாவிய செயற்பாட்டுக்கான சில வாய்ப்பு வளங்களைத் தம் கரங்களில் வைத்திருக்கின்றன என்பதில் உண்மை இல்லாமலில்லை. ஏறத்தாழ எப்போதுமே காலனித்துவ சக்திகளின் நலன்களுக்கு மட்டுமே சேவையாற்றும் பாதுகாப்புச் சபையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுகையில், அவை இன்னுமதிகம் பயன்தருபவையாக மாறக்கூடும்.

ஐக்கிய நாடுகள் சபை பல சமயங்களில் இஸ்லாத்தின் எதிரிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது; ‘மூன்றாம் உலக’ நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும், 1960-களிலும் 1970-களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏறத்தாழ முழுக் கட்டுப்பாடும் ‘மூன்றாம் உலகின்’ கரங்களில் வந்ததென்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமானதொரு விடயமாகும். வினைத்திறன் மிக்க உலகளாவிய இஸ்லாமிய ஒழுங்கமைப்புகள் இல்லாதவொரு சூழ்நிலையில் முஸ்லிம்கள் சிலர் இவ்வாறு நம்புகின்றனர்:

“அமைப்பு ரீதியான பன்னாட்டு நிறுவனங்கள்—அவற்றுள் ஒன்றுதான் ஐக்கிய நாடுகள் சபை—தமது குறிக்கோள்கள் என எவற்றை முழங்கி வருகின்றனவோ அவற்றுக்கு ஏற்ப என்றாவது ஒருநாள் செயற்படத் துவங்கக் கூடும்; இன்று அவை அமெரிக்கா உள்ளிட்ட காலனிய லும்பன்களால் மிகத் தீவிரமாக முடமாக்கப்பட்டிருந்த போதிலும் சரியே.”

முஸ்லிம்கள் உள்ளிட்ட மத நம்பிக்கையாளர்கள் பலரும் “உலக அழிவு நாள் நெருங்கிவிட்டதோ” என்று வியப்புக்காளாகி வருவது பற்றி இறுதியாக சில வார்த்தைகள்.

“உலக அழிவு” பற்றி பல்வேறு தரப்புகளில் இருந்து ஏராளமான கணிப்புகள் இன்று இணையத்தில் வலம்வந்து கொண்டுள்ளன. எனினும் வரலாற்று ரீதியில் பார்க்கின், மக்கள் எப்போதும் தமது பிரச்சினைகளை ‘உலக அழிவு நாளுக்கான’ தெளிவான அறிகுறிகள் என்றே எண்ணி வந்துள்ளனர் எனத் தெரிகிறது. அந்த நாள் எப்போது வரும்; வாக்களிக்கப்பட்ட மீட்பர் அல்லது மீட்சி எப்போது வருமென்று அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பது மட்டும் தான் இதில் நம்மால் அறுதியிட்டுக் கூறமுடிகிற ஒரே விடயம்.

ஈராக்கிலும் ஃபலஸ்தீனிலும் ‘மேற்கத்திய நாகரிகத்தின்’ காட்டுமிராண்டித்தனம் அதன் குற்றஉடந்தையின் ஊடாகவும், நேரடிக் குற்றச்செயல்களின் ஊடாகவும் அம்பலப்பட்டிருக்கிறது; உலகப் பொருளாதாரம் சரிந்து வருகிறது; அமெரிக்கர்கள் தாமொரு இழிவுதரும் போலீஸ் அரசின் கீழ் வாழ்ந்து வருகிறோம் என்பதை உணரத் தொடங்கியுள்ளனர் என்பதால் மட்டுமே இவை மற்றெல்லோருக்குமான (அல்லது, உண்மையில் மற்றெவருக்குமான) உலக அழிவாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை.

இது நமது காலனியப்பட்ட மனங்களுக்கான தெளிவானதொரு அறிகுறியே அன்றி வேறில்லை. உண்மையைக் கூறினால் இது மயக்கும் மேற்குலகு, அதன் செல்வாக்கு எல்லைகள், குறிப்பாக அதன் எல்லையில்லாப் பிரச்சினைகள் அனைத்துக்கும் வெளியே நமக்கெனக் காத்துக் கிடக்கும் மாற்றீடுகளையும் நம்பிக்கையையும் தேடிச்செல்வதற்கான மிகவும் வாய்ப்பானதொரு சந்தர்ப்பமாகவே இருக்கிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

1. கூகி வா தியாங்கோ எழுதிய காலனிய ஓர்மை அகற்றல் (அகரம் பதிப்பகம், 2004), சிலுவையில் தொங்கும் சாத்தான் (தாமரைச்செல்வி பதிப்பகம், 2000), இடையில் ஓடும் நதி (ஸ்நேகா பதிப்பகம், 2005), தேம்பி அழாதே பாப்பா (நிழல் பதிப்பகம், 2001) போன்ற நூல்களும் நாவல்களும் ஏற்கனவே தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2. www.multiworldindia.org/multiversity/multiversity-library/

Privacy Policy  |  Terms of Use
Copyrights © 1436 AH
Sign In
 
Forgot Password?
 
Not a Member? Signup

Loading...